Published : 21 Jul 2023 07:23 PM
Last Updated : 21 Jul 2023 07:23 PM

கோவை, மதுரை, தூத்துக்குடியில் பாதாளச் சாக்கடை மற்றும் குடிநீர், மழைநீர் வடிகால் பணிகளுக்கு ரூ.1,478 ஒதுக்கீடு

சென்னை: ஆசிய மேம்பாட்டு வங்கி நிதி உதவியுடன், தமிழ்நாடு நகர்ப்புற முன்னணி முதலீட்டு திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை ரூ.1,478.34 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள முக்கிய தொழில் பெருவழித்தடங்களில், முன்னுரிமை அடிப்படையில் குடிநீர் வழங்கல், கழிவுநீர் மற்றும் வடிகால் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், புதுமையான திட்டங்களை ஊக்குவித்தல், நகர்ப்புற ஆளுகை, மாநில மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திறனை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, காலநிலை நெகிழ்ச்சி மற்றும் நகர்ப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களை கொண்ட தமிழ்நாடு நகர்ப்புர முன்னணி முதலீட்டு திட்டம், ஆசிய மேம்பாட்டு வங்கி நிதி உதவியுடன் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

முதல்வர், தமிழ்நாடு நகர்ப்புற முன்னணி முதலீட்டு திட்டத்தின் இரண்டாம் கட்டத்தைத் தொடர்ந்து, தமிழக அரசின் ரூ.328.06 கோடி நிதி பங்களிப்பு மற்றும் ஆசிய மேம்பாட்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.1,478.34 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற முன்னணி முதலீட்டு திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை செயல்படுத்த நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்கள்.

தமிழ்நாடு நகர்ப்புற முன்னணி முதலீட்டு திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ், கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம் மற்றும் துடியலூர் ஆகிய 4 பகுதிகளில் ரூ.922.16 கோடி மதிப்பீட்டில் பாதாளச் சாக்கடைத் திட்டம், தூத்துக்குடி மாநகராட்சிக்கு ரூ.87.01 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் திட்டப்பணிகள் மற்றும் மதுரை மாநகராட்சிக்கு ரூ.370.61 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் வழங்கல் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ், திட்ட ஆலோசனைப் பணிகள், நிருவாக மேம்பாடு உள்ளிட்ட பணிகளும் செயல்படுத்தப்படும். மேலும், இத்திட்டத்தின் கீழ், பணிகளுக்கு ஒப்புதல் வழங்குவதுக்காகவும், திட்ட நிதியை சிறப்பாக பயன்படுத்துவது மற்றும் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவது தொடர்பான திட்டச் செயலாக்க வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதுக்காகவும், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளை உள்ளடக்கிய அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புப் பகுதிகளிலும் உயர்தரமான சாலைகள், ஆற்றல்மிகு தெருவிளக்குகள், திடக்கழிவு மேலாண்மை, பாதாளச் சாக்கடை வசதி மற்றும் மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்துவதற்கு, அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டப் பணிகளின் மேலும் ஒரு முக்கிய பகுதியாக இத்திட்டம் அமைந்துள்ளது." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x