Published : 21 Jul 2023 07:07 PM
Last Updated : 21 Jul 2023 07:07 PM

இலங்கையில் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ ரணிலிடம் வலியுறுத்திய பிரதமர் மோடிக்கு நன்றி: அண்ணாமலை  

சென்னை: தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ ரணிலிடம் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ள இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே, பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை இன்று நேரில் சந்தித்து உரையாடினார். இலங்கைத் தமிழ் மக்கள் வாழ்வு மேம்படவும், அவர்களின் பொருளாதாரம் வளர்ச்சி பெறவும், பல்வேறு திட்டங்களையும் நிதி உதவிகளையும் தொடர்ந்து செய்து வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நமது மத்திய அரசு, தொடர்ந்து செய்யவிருக்கும் பணிகள் குறித்து இந்த சந்திப்பில் முடிவாகின.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான விமானப் போக்குவரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இலங்கை தமிழர்கள் பகுதியில் சுற்றுலா, தொழிற்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும். மேலும், தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவையை தொடங்க பாரதப் பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் ரனில் விக்கிரமசிங்கே இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு சங்க காலம் முதலே தொடர்ந்து வருவது. சங்க இலக்கியமான பட்டினப்பாலையில், ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் பூம்புகார் துறைமுகத்தில் குவிந்து கிடந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய தொன்மையுள்ள தமிழகம் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்துத் தொடர்பு, 1960களில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்டு, நிறுத்தப்பட்டது. இலங்கையின் உள்நாட்டுப் போரினால் பாதிப்படைந்த இலங்கை காங்கேசம் துறைமுகத்தை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 287 கோடி மதிப்பில் புதுப்பித்து, தற்போது மீண்டும் தமிழகம் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்தைத் தொடங்கவுள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழர்கள் பாரம்பரியமும், ஈழத் தமிழர்களுடனான கலாச்சாரத் தொடர்பும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும், இந்த விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி, இலங்கை அதிபரை வலியுறுத்தியுள்ளார். இலங்கையில், சீரமைப்பு மற்றும் நல்லிணக்கப் பணிகளை இலங்கை அரசு நிறைவேற்றவும், இலங்கைத் தமிழர்களின் அதிகாரப் பகிர்வை உறுதி செய்யும் பதின்மூன்றாவது சட்டத்திருத்தத்தை அமல்படுத்துதல் மற்றும் மாகாணசபைத் தேர்தலை நடத்துதல் என்ற தனது உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் என்றும், இலங்கை தமிழ் மக்கள் மரியாதை மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்றும் இலங்கை அதிபரிடம் பாரதப் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இந்தியா இலங்கை உறவு, சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவிலிருந்து தமிழர்கள், இலங்கையில் குடியேறி, 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இரு நாடுகளிடையேயான தூதரக உறவை நிறுவி 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த கலாச்சார உறவை மேலும் பெருமைப்படுத்தும் வகையில், இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 75 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் வளர்ச்சித் திட்டங்களில் இந்தியாவின் பங்களிப்பும் இருக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து பல திட்டங்களைச் செயல்படுத்தி, தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் இடையே உள்ள கலாச்சாரப் பாரம்பரியத்தை மீட்டுப் புதுப்பித்திருக்கும் பாரதப் பிரதமருக்கு, தமிழக மக்கள் சார்பாகவும், தமிழக பாஜக சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x