Published : 21 Jul 2023 05:33 PM
Last Updated : 21 Jul 2023 05:33 PM
மேட்டூர்: மேட்டூர் அணையின் மீன் வளத்தைப் பெருக்குவதற்காக, அணையில் ரோகு, மிர்கால் உள்ளிட்ட வகைகளில் மொத்தம் 6 லட்சம் மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டது.
தமிழகத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான மேட்டூர் அணை, சுமார் 60 சதுர மைல் பரப்புக்கு நீர் தேங்கக்கூடிய பிரமாண்டமானது. இந்த அணையில் தேக்கப்படும் நீரைக் கொண்டு, 12-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. பாசனத்துக்காக, அணையில் ஆண்டு முழுவதும் நீர் இருப்பு தக்க வைக்கப்படுவதால், அணையில் மீன் உற்பத்தியும் பெருமளவில் நடைபெறுகிறது.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணையில் கிடைக்கும் மீன்கள், மேட்டூர் அணையில் மீன்பிடி உரிமம் பெற்றுள்ள மீனவர்களால் பிடிக்கப்பட்டு, கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் மூலம் காவிரி நெடுக, மீன் வளம் பெருக்கடைந்து, கரையோர மாவட்ட மீனவர்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக அமைகிறது.
இதனிடையே, அணையில் மீன் வளத்தை பெருக்கிடும் பணியில், மேட்டூர் மீன் வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் செயல்பட்டு வரும் மீன்கள் இனப்பெருக்க மையத்தில், மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மீன் குஞ்சுகள் ஆண்டுதோறும் ஜூலை மாதம் தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூன் வரை சீரான இடைவெளியில் மேட்டூர் அணையில் விடப்படுகிறது.
இந்நிலையில், நடப்பாண்டில் 76.73 லட்சம் மீன் குஞ்சுகள் அணையில் விடுவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, முதற்கட்டமாக மேட்டூர் அணையில் இன்று 6 லட்சம் ரோகு, மிர்கால் மீன் குஞ்சுகள் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் கலந்து கொண்டு மீன் குஞ்சுகளை ஆற்றில் விட்டார், இதில் மேட்டூர் கோட்டாட்சியர் தணிகாசலம், தருமபுரி மீன்வளத்துறை துணை இயக்குநர் வேல் முருகன் மற்றும் சேலம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் (பொ) கோகுலரமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT