Published : 21 Jul 2023 04:30 PM
Last Updated : 21 Jul 2023 04:30 PM
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கம் ஏராளமான விளையாட்டு வீரர்களை உருவாக்கித் தந்திருக்கிறது. இங்கு பயிற்சி பெற்ற வீரர்கள் பலர் தேசிய அளவில் சாதனைகள் படைத்துள்ளனர். தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக் என்று அனைத்து வகை விளையாட்டு வீரர்களும் இங்கு தினசரி கடுமையான பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.
காலை நேரங்களில் பொதுமக்களும் இங்கு வந்து நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். இங்குள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் (ஜிம்) காவலர்கள், விளையாட்டு வீரர்கள், மாணவர்கள், பொதுமக்கள் காலை, மாலை நேரங்களில் உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர்.
ஆனால், உடற்பயிற்சிக் கூடம் முறையாக பராமரிக்கப்படவில்லை. உடல்நலத்தை பராமரிக்க வேண்டும் என்ற விருப்பத்தோடு வருவோர்,உடற்பயிற்சிக் கூடம் பராமரிப்பின்றி கிடப்பது கண்டு வேதனையடைகின்றனர். உடற்பயிற்சிக் கூட கட்டிடத்தின் மேல் பகுதியில் தண்ணீர் தொட்டி வைத்திருக்கின்றனர்.
தினசரி காலையில் இந்த தொட்டி நிரம்பி பல மணிநேரத்துக்கு தண்ணீர் வீணாகி கொண்டிருக்கிறது. மாதக்கணக்கில் இந்நிலை தொடர்வதால், கட்டிடத்தின் மேல்பகுதியில் தண்ணீர் தேங்கி, மேற்கூரை சேதமடைந்து விட்டது. சேதமடைந்த மேற்கூரை வழியாக உடற்பயிற்சிக் கூடம் முழுவதும் ஆங்காங்கே அருவிபோல் தண்ணீர்கொட்டுகிறது.
இந்நிலை தொடர்ந்தால் கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது. மேலும், கூடம் முழுவதும் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியும் போல காணப்படுகிறது. துர்நாற்றம் கடுமையாக உள்ளது. சரியான வெளிச்சமும் இல்லை. இது, அங்கு பயிற்சிக்கு வருவோருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்துகிறது. மேலும் பாதுகாப்பற்ற நிலையையும் உருவாக்கியுள்ளது. தண்ணீர் தேங்கிக் கிடப்பதால் அங்குள்ள பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கருவிகள் பாழ்பட்டு வருகின்றன.
மேலும் உடற்பயிற்சிக் கூடத்தை சுற்றிலும் புதர் மண்டி காணப்படுகின்றன. இங்குள்ள கழிவறைகளில் தண்ணீர் இல்லாததாலும், முறையாக பராமரிக்காததாலும் சிலர் இயற்கை உபாதை கழிக்க புதர்ப் பகுதிகளை பயன்படுத்தி வருகின்றனர். அரசால் உருவாக்கி தரப்பட்டு, பலருக்கும் பயனுள்ளதாக இருந்து கொண்டிருக்கும் இந்த உடற்பயிற்சிக் கூடத்தை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே பயிற்சியாளர்களின் கோரிக்கை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT