Published : 05 Jul 2014 10:52 AM
Last Updated : 05 Jul 2014 10:52 AM
தமிழகத்தை சேர்ந்த 83 பேரின் குரூப் 1 தேர்வு ரத்தானதை உச்ச நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக சீராய்வு மனுவை தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழகத்தில் கடந்த 2001-ம் ஆண்டு குரூப் 1 தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. காவல்துறை டிஎஸ்பி, துணை ஆட்சியர், வணிக வரித்துறை அதிகாரி, கூட்டுறவு துணைப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய 91 காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அவர்கள், 2004-ல் பணியமர்த்தப்பட்டனர்.
தேர்வில் மோசடி நடந்ததாக, அதில் தோல்வியடைந்தவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, 91 பேரில், 83 பேர் குரூப் 1 அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்து 2011-ல் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து டிஎன்பிஎஸ்சி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவி உயர்வு
இதைத் தொடர்ந்து, அந்த 83 அதிகாரிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தேர்வு ரத்தானதால், பாதிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்படும் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களில் பலர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் அந்தஸ்தில் பணிபுரிந்து வருகின்றனர். சிலர் டாஸ்மாக் பொது மேலாளர்கள், ஆளுநர் மாளிகை துணைச் செயலாளர், வீட்டு வசதி வாரிய செயலாளர் போன்ற பதவிகளை வகித்து வருவதாகத் தெரிகிறது.
இந்நிலையில், அவர்களுக்கு எதிராக இத்தீர்ப்பு வந்துள்ளது. இதனை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட தமிழக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT