Published : 21 Jul 2023 01:48 PM
Last Updated : 21 Jul 2023 01:48 PM

மணிப்பூர் கொடூரம் | குஷ்பு, வானதி சீனிவாசன் எங்கே? - அமைச்சர் கீதாஜீவன் கேள்வி

அமைச்சர் கீதாஜீவன் | கோப்புப் படம்

சென்னை: மணிப்பூரில் பெண்கள் மீது நடத்தப்படும் கொடூரப் பாலியல் தாக்குதல் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன என்றும், பாஜக மகளிர் அணி தலைவி எங்கே என்றும் தமிழக சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இதயம் உள்ள எவராக இருந்தாலும் மணிப்பூர் பெண்களுக்கு நிகழ்ந்த கொடூரத்தை வெளிப்படுத்திய வீடியோ காட்சிகளைத் தொடர்ந்து பார்க்க முடியாது. அந்தளவுக்கு நெஞ்சத்தை உலுக்கி எடுக்கிறது. ஒரு பெண்ணாக, இந்தக் காட்டுமிராண்டித்தனமான செயலைக் கண்டு பதறுகிறேன். வன்மையாகக் கண்டிக்கிறேன். மணிப்பூரில் வாழும் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, மதவெறியைத் தூண்டி, மாநிலத்தை கலவரக் காடாக்கி, ரத்த ஆறு ஓடும்படி செய்திருக்கின்றன மாநிலத்தை ஆளும் பாஜக அரசும், மத்திய பாஜக அரசும்.

மூன்று மாதங்களாக மணிப்பூரில் கலவரம் பற்றி எரியும் நிலையில், நாட்டின் பிரதமர் அந்தப் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. உண்மை நிலவரம், எத்தனை கொடூரமாக இருக்கிறது என்பதைத் தொடர்ந்து வெளியாகும் வீடியோ காட்சிகள் வெளிப்படுத்தி வரும் நிலையில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கும் நாளில் செய்தியாளர்களிடம் பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

Better late than never என்பது போல இனியாவது உண்மைக் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுகுறித்து பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் அனுமதி மறுக்கிறது மத்திய பாஜக அரசு. இந்நிலையில், பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு, நட்டு வைக்கப்பட்டிருக்கும் கொடூரமும் வெளிப்பட்டுள்ளது.

இத்தகைய கொடூரங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து, மணிப்பூர் மாநில பாஜக முதல்வரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இது போல பல நிகழ்வுகள் நடந்துள்ளன. எத்தனை வழக்குகள் பதிவு செய்வது என்று மனிதாபிமானமற்ற முறையில் அலட்சியத்துடன் பதிலளித்திருக்கிறார்.

பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லாத சூழல் மணிப்பூரில் நிலவுகிறது. இதுபோன்ற கொடூர நிகழ்வுகளில் பெண்களின் நம்பிக்கையும் பாதுகாப்பும், தேசிய மகளிர் ஆணையம்தான். மேடைகளில் பேசுபவர்கள், ஊடகங்களில் விவாதிப்பவர்கள், சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் உள்ளிட்டோர் பொதுவான முறையில் பெண்களைக் குறித்துப் பேசினாலும், தனிப்பட்ட முறையில் விமர்சித்தாலும் உடனடியாக, தானாக முன்வந்து அதனை விசாரிக்கிறது தேசிய மகளிர் ஆணையம். இதுவும் அதன் கடமைதான்.

பேசுவதற்கே இத்தனை கடமையுணர்ச்சியுடனான செயல்பாடு என்றால், மணிப்பூரில் மாதக்கணக்கில் பெண்கள் மீது நடத்தப்படும் கொடூரப் பாலியல் தாக்குதல் மீதான நடவடிக்கை என்ன? இத்தனை நாளாக கண்டும் காணாதுதுமாக இருந்தது ஏன்?

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் (குஷ்பு) என்ற பொறுப்பில் இருந்துகொண்டு, பெண்கள் பாதுகாப்பு என்று கிளிசரின் கண்ணீர் வடித்தவர் எங்கே போனார்? பாஜகவிலும் மகளிர் பிரிவு இருக்கிறது. அதன் தேசிய அளவிலான தலைவராக இருக்கக்கூடியவர் (வானதி) என்ன செய்து கொண்டிருந்தார்?

நாட்டில் வாழும் அத்தனைப் பெண்களின் நெஞ்சிலும், தங்களால் இனி பாதுகாப்பாக வாழ முடியுமா என்ற அச்ச உணர்வை விதைத்திருக்கின்றன மணிப்பூர் கொடூர நிகழ்வுகள். ஒட்டுமொத்த இந்தியப் பெண்களின் நலனைக் கருதியும், மணிப்பூர் மாநிலப் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் தேசிய மகளிர் ஆணையம் தன் கண்களைத் திறந்து பார்த்து, கடமையை விரைந்து மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x