Last Updated : 21 Jul, 2023 02:44 PM

 

Published : 21 Jul 2023 02:44 PM
Last Updated : 21 Jul 2023 02:44 PM

கோவையில் தாமதமாகும் மேற்கு புறவழிச் சாலை திட்டப் பணி!

கோப்புப் படம்

கோவை: கோவை மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணிக்கு, ஒப்பந்த நிறுவனம் தேர்வாகியும், பணி ஆணை வழங்கப்படாததால், திட்டப்பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கோவை நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மேற்கு புறவழிச் சாலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. பாலக்காடு சாலை மதுக்கரையில் தொடங்கி, சுண்டக்காமுத்தூர், பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, பேரூர் மேற்கு சித்திரைச் சாவடி, கலிக்க நாயக்கன்பாளையம், சோமையம் பாளையம், வடவள்ளி, பன்னிமடை, குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம் வழியாக நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் முடிவடையும் வகையில் மொத்தம் 32.43 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.320 கோடி மதிப்பில் புறவழிச் சாலை அமைக்க கடந்த 2016-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. மூன்று கட்டங்களாக மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம் இத்திட்டப்பணி மேற் கொள்ளப்படுகிறது.

இதற்காக 16 கிராமங்களில் இருந்து 355 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. முதல் கட்ட திட்டத்தில் மொத்தம் 11.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு புறவழிச்சாலை அமைக்க ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அதில் யாரும் கலந்து கொள்ளாததால், ஏப்ரல் மாதம் மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அதில் 3 நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதில் இருந்து திருச்சியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

அதன் விவரம், ஒப்பந்தப்புள்ளி ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து ஒப்புதல் கிடைக்காததால், திட்டப்பணியை மேற்கொள்ள பணி ஆணை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் கோவைக்கு முதல்வர் ஆய்வுக்காக வரும்போது, இத்திட்டப்பணியை தொடங்கி வைக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது,‘‘தற்போதைய சூழலில், கோவையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, மேற்குபுறவழிச்சாலை திட்டம் அவசியமான ஒன்றாகும். ஏனெனில், நீலகிரியில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள், கோவை - பாலக்காடு சாலையில் இருந்து நீலகிரி செல்லும் வாகனங்கள் கோவை மாநகருக்குள் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மேற்கு புறவழிச் சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டால், மாநகருக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறையும். விபத்துகள், போக்குவரத்து நெரிசல்கள் குறையும். நிலம் கையகப்படுத்தும் பணியை விரைவாக முடித்து, இத்திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும். அதேசமயம், பசுமைச்சூழல் மாறாத வகையில் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.

மாவட்ட வருவாய்த் துறையினர் கூறும் போது,‘‘மேற்கு புறவழிச் சாலை திட்டப்பணிக்கான நிலம் கையகப்படுத்தும் பணி, நெடுஞ்சாலைத் துறையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது’’ என்றனர்.

மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது,‘‘மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணிக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கட்டப் பணியில் 11.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு, 30 மீட்டர் அகலத்துக்கு சாலைகள் அமைக்கப்படும். இத்திட்டத்தில் இரு இடங்களில் சுரங்கப்பாதை கட்டும் திட்டமும் உள்ளது.

முதல் கட்ட பணி முடிவடைய கிட்டத்தட்ட இரு ஆண்டுகளாகிவிடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. முதல்கட்ட திட்டத்துக்காக மொத்தம் 90 சதவீதம் நிலம் கையகப்படுத்தப்பட்டுவிட்டது. இரண்டாம் கட்ட திட்டப்பணிக்கான நிலம் கையகப் படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2-ம் கட்ட திட்டப்பணிக்காக இதுவரை 30 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட திட்டப் பணிக்கு இன்னும் நிலம் கையகப் படுத்தும் பணி தொடங்கப்பட வில்லை’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x