Published : 21 Jul 2023 09:15 AM
Last Updated : 21 Jul 2023 09:15 AM
கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் ஆரணி அருகே உள்ளது புதுப்பாளையம் கிராமம். இது கும்மிடிப்பூண்டி வட்டத்துக்கு உட்பட்டது. புதுப்பாளையம் கிராமத்தையும், புதுவாயல் - பெரியபாளையம் சாலையில் உள்ள, ஊத்துக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட கொசவன்பேட்டை அஞ்சாத்தம்மன் கோயில் பகுதியையும் இணைக்கும் வகையில் ஆரணி ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. இது மிகவும் பழமையானது.
மழைக்காலங்களில் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில்இருந்து திறக்கப்படும் உபரி நீர் மற்றும் மழைநீர் வெள்ளமாக ஆரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும்போதெல்லாம் இந்த தரைப்பாலம், நீரில் மூழ்கிவிடும். இதன் காரணமாக, புதுப்பாளையம் மற்றும் அதை ஒட்டியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக ஆரணி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால், மிகவும் ஆபத்தான வகையில், ஆரணி ஆற்றை படகு மூலம் கடக்கவேண்டும். அல்லது சுமார் 1 கி.மீ., தொலைவில் உள்ள ஆரணிக்கு, பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சுமார் 12 கி.மீ. தூரம் கடந்து செல்லவேண்டும்.
மேலும், புதுப்பாளையம் - கொசவன்பேட்டை இடையே உள்ள தரைப்பாலம், மழை வெள்ளத்தால் சேதமடையாமல் இருக்க ஏதுவாக, தரைப்பாலத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தளம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தால் சேதமடைந்தது.
அந்த தளம் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை. எனவே, ஆரணி ஆற்றின் குறுக்கே, புதுப்பாளையம் - கொசவன்பேட்டை தரைப்பாலத்துக்கு பதிலாக, உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று எம்.பி., எம்எல்ஏ மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மக்கள்நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், எந்தநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், விரைவில் இங்கு உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறியுள்ளதாவது:
புதுப்பாளையம் மனோகரன்: மழைக்காலங்களில் ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போதெல்லாம், புதுப்பாளையம் - கொசவன்பேட்டை இடையே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கிவிடுகிறது. அப்போது, புதுப்பாளையம், மங்களம், காரணி, எருக்குவாய், நெல்வாய், முக்கரம்பாக்கம், சின்னபுலியூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பள்ளி, கல்லூரி, மருத்துவ வசதி மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு, ஆரணி மற்றும் பொன்னேரி, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.
புதுப்பாளையம் செல்வம்: கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, தரைப்பாலத்துக்கு பதிலாக உயர்மட்ட பாலம் அமைக்க, ஆரணி ஆற்றுப் பகுதியில் அதிகாரிகள் மண் பரிசோதனை செய்தனர். அதன் பிறகு, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இதுதொடர்பாக எந்த பணியும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழையின்போது இந்த தரைப்பாலம் மூழ்கியது. ஆய்வுக்கு வந்த, அப்போதைய பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்றார். அதற்கான பணி இன்னும் தொடங்கப்படவில்லை.
காரணி பகுதி விவசாயி மெய்ஞானம்: எங்கள் கிராமத்தை சேர்ந்த வேழவேந்தன், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சராக இருந்தபோது, அவரது முயற்சியால் ஆரணி ஆற்றின் குறுக்கே புதுப்பாளையம் - கொசவன்பேட்டை இடையே தரைப்பாலம் அமைக்கப்பட்டது. காரணி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தோர், எளிதாக ஆரணி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இந்த தரைப்பாலம் பயன்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தில் இப்பாலம் மூழ்கிவிடுவதால், மக்கள் வசதிக்காக உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டியது அவசியம்.
காரணி பகுதி விவசாயி ராமமூர்த்தி: புதுப்பாளையம், காரணிபகுதியை சேர்ந்த பெரும்பாலான விவசாயிகளுக்கு சொந்தமான விவசாய நிலங்கள், புதுவாயல் - பெரியபாளையம் சாலையைஒட்டியுள்ள ராள்ளபாடி கிராம பகுதியில் உள்ளன. மழைக்காலங்களில் இப்பகுதி விவசாயிகள், தங்கள் விவசாய நிலங்களுக்கு செல்லமுடியாத நிலை உள்ளது.
காரணி உள்ளிட்ட பகுதிகளில் கீரை, கத்திரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறி வகைகள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. மழைக்காலங்களில் தரைப்பாலம் மூழ்குவதால், காய்கறிகளை ஆரணி, சென்னை, கோயம்பேடு சந்தைகளுக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடிவதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ஆரணி ஆற்றின் குறுக்கே புதுப்பாளையம் - கொசவன்பேட்டைக்கு இடையே உள்ள தரைப்பாலத்துக்கு பதிலாக, ரூ.19 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் அனுமதிக்கு அளிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைத்த உடன், டெண்டர் விடப்பட்டு, உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT