Published : 21 Jul 2023 09:30 AM
Last Updated : 21 Jul 2023 09:30 AM
வண்டலூர்: செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள சிங்கார தோட்டம் பகுதியில் ஏராளமானோர் வசிக்கின்றனர். புதிதாக பல குடியிருப்புகளும் கட்டப்பட்டு வருகின்றன. இப்பகுதி மசூதி தெருவில் உள்ள சிலர், சாலையை ஆக்கிரமித்து வீடுகள், சுற்றுச்சுவரை கட்டியுள்ளனர். இதனால், பிரதான சாலை குறுகலாகிவிட்டது. மொத்தம் 15 அடி அகலம் உள்ள சாலை தற்போது ஆக்கிரமிப்பு காரணமாக 5 அடியாக சுருங்கி உள்ளது. இதேபோல, 10 அடி சாலையாக உள்ள சீனிவாச நாயக்கர் குறுக்கு தெரு, முட்டுசந்துபோல ஆகிவிட்டது.
இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். கார்கள், ஆம்புலன்ஸ்கள் உள்ளே நுழைய முடியாததால், நடக்க முடியாத முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவதில்லை.
கடந்த 15 ஆண்டுகளாக இந்த சாலை இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. ஊராட்சி தலைவர் தொடங்கி, முதல்வர் வரை புகார்அனுப்பியும் தீர்வு கிடைக்கவில்லை. ஆய்வுசெய்ய வரும் அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர் மக்கள்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
குடியிருப்புவாசி ஏ.அப்துல் வகாப்: வண்டலூர் பகுதியில் ஏராளமான முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இவர்கள் மசூதி தெருவில் உள்ள தொழுகை கூடத்துக்கு தொழுகைக்கு செல்வது வழக்கம். ஆனால், இங்கு உள்ள சாலை மிகவும் குறுகலாக இருப்பதால், யாரும் வாகனத்தில் உள்ளே வர முடிவதில்லை. குறிப்பாக, பண்டிகை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தொழுகைக்கு அதிக முஸ்லிம்கள் வருவார்கள்.
மசூதி தெருகுறுகலாக இருப்பதால், வாகனத்தில் வரமுடியாத நிலை ஏற்பட்டு வாகனங்களை வேறு இடங்களில் நிறுத்துகின்றனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்ற கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து அதிகாரிகளுக்கும், முதல்வருக்கும் மனு கொடுத்து வருகிறோம். அதிகாரிகள் வருகின்றனர், பார்க்கின்றனர், செல்கின்றனர். தீர்வுதான் கிடைக்கவில்லை.
எஸ்.சந்தான கிருஷ்ணன்: சாலை குறுகலாக இருப்பதால் இருசக்கர வாகனங்கள்மட்டுமே இந்த சாலையில் செல்ல முடியும்.கார்களில் வர முடியாது. யாருக்காவது உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு செல்ல முடியாது. வீடுகளில் கழிவுநீர் தொட்டி நிரம்பினால், அதை சுத்தம் செய்யும் கழிவுநீர் லாரிகூட உள்ளே வர முடியாது.
மழைக்காலங்களில் எங்கள் தெருக்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கும். ஆக்கிரமிப்பு காரணமாக மழைநீரும் வெளியேற முடியாமல் குடியிருப்புக்குள் புகுந்துவிடுகிறது. அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகளும் எங்கள் பிரச்சினைகளை கண்டுகொள்வது இல்லை. மாவட்ட ஆட்சியர் தீர்வு அளிப்பார் என நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.
எஸ்.புனிதா: இப்பகுதியில் ஒரு காலத்தில் சிங்கார தோட்டம் என்ற பெயரில் பூந்தோட்டம் இருந்தது. தற்போது அனைத்தும் குடியிருப்புகளாக மாறிவிட்டன. முறையாக அரசிடம் அனுமதி பெறாமல் சிறிய அளவில்இடங்களை அவ்வப்போது விற்று வந்ததால், சாலைகளை முறைப்படுத்தாமல் விட்டுவிட்டனர். அப்போது இருந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகளும் கண்டுகொள்ளவே இல்லை.
இதனால் பல சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, குறுகிய சாலைகளாக மாறிவிட்டன. சீனிவாச நாயக்கர் குறுக்கு தெருவை ஆக்கிரமித்து முட்டுசந்தாகவே மாற்றிவிட்டனர். இந்த சாலையில் இருசக்கர வாகனம் மட்டுமே வரமுடியும். 10 அடி சாலையிலும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. மசூதி தெரு ஆக்கிரமிக்கப்பட்டதால் எங்கள் சாலை முட்டுசந்தாக மாறிவிட்டது.
மழைக்காலங்களில் வீட்டுக்குள் மழைநீர் புகுவதோடு, விஷ ஜந்துக்களும் நுழைகின்றன. உள்ளாட்சி பிரதிநிதிகள் இரு அணிகளாக பிரிந்து, மக்கள் பிரச்சினைகளை கவனிக்காமல் இருக்கின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி போதிய சாலை, வடிகால் வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியபோது, ‘‘புகாரில் குறிப்பிட்டுள்ள வண்டலூர் சிங்கார தோட்டம் மசூதி தெருவில் ஆய்வு செய்யப்படும். வருவாய் ஆவணங்களும் ஆய்வு செய்யப்படும். பின்னர், வட்டாட்சியர் மூலம் அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு இருக்கும் பட்சத்தில் அதை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT