Published : 28 Nov 2017 02:20 PM
Last Updated : 28 Nov 2017 02:20 PM
சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வணிக ரீதியிலான நடவடிக்கைகளால் தொட்டபெட்டா சிகரம் மற்றும் காட்சி முனை பொலிவிழந்து வருவதாக, சுற்றுலா ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தொட்டபெட்டா சிகரம். ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தொட்டபெட்டா சிகரத்தை காண சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வனத்துறையினரின் கட்டுபாட்டில் உள்ள இந்த சிகரத்தில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலமாக காட்சிமுனை (டெலஸ்கோப் ஹவுஸ்) அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக வனத்துறைக்கு குத்தகை செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த காட்சிமுனை பிரசித்தி பெற்றதால், சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், கடந்த 1993-ம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலமாக உணவகமும் நடத்தப்பட்டு வந்தது. இந்த உணவகத்துக்கும், குத்தகை அடிப்படையில் வனத்துறை அனுமதி அளித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, குத்தகையை புதுப்பிக்க வேண்டும்.
இந்நிலையில், பராமரிப்பின்றி உணவகம் இடிந்துவிழும் நிலையில் இருந்தது. மேலும், 2015-ம் ஆண்டுடன் குத்தகை முடிவடைந்துவிட்டதால், குத்தகையை புதுப்பிக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் வனத்துறையிடம் விண்ணப்பித்தனர். ஆனால், குத்தகை புதுப்பிக்கப்படாமல், உணவகத்தை காலி செய்ய வனத்துறை நோட்டீஸ் அளித்தது.
இதையடுத்து, காட்சிமுனை கட்டிடத்திலேயே உணவகத்தை நடத்தி வருகிறது சுற்றுலா வளர்ச்சி கழகம். மேலும், கடைகள், பொருட்களும் வைக்கப்பட்டுள்ளன. இதனால், தொலைநோக்கிக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர். சுற்றுலா பயணிகள் சாப்பிட, அங்குள்ள புல்தரையில் மேஜைகள் மற்றும் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.
காட்சிமுனை சுற்றிலும் கடைகள் புற்றீசல்போல் பெருகிவிட்டன. இதனால், காட்சிமுனையை சுதந்திரமாக கண்டுகளிக்க முடியாத நிலை சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வணிக ரீதியிலான நடவடிக்கைகளால், காட்சிமுனையின் எழில் குன்றிவிட்டது என, சுற்றுலா ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக சுற்றுலா வளர்ச்சி கழக தொட்டபெட்டா மேலாளர் பாலசுப்ரமணியன் கூறும்போது, ‘உணவகம் தொடர்பாக துறை செயலாளர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் குத்தகை புதுப்பிக்கப்படும். தற்காலிகமாக, காட்சிமுனை கட்டிடத்தில் உணவகம் செயல்பட்டு வருகிறது. கட்டிடம் கட்டப்பட்டதும் உணவகம் மாற்றப்படும்’ என்றார்.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் என்.கே.முரளியிடம் கேட்டபோது, ‘உணவகத்தில் சிற்றுண்டி மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதனால் பாதிப்பு ஏதும் இல்லை. வனத்துறையுடனான பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டது. கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது’ என்றார்.
சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர், மண்டல மேலாளர்களின் பதில்கள் மாறுபட்டுள்ளதால், உணவகப் பிரச்சினையில் குழப்பம் நிலவுகிறது. வனத்துறை மூலமாகவும் உணவகம் கட்ட, குத்தகையை புதுப்பிக்க தயக்கம் நிலவுவதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT