Published : 20 Jul 2023 07:02 PM
Last Updated : 20 Jul 2023 07:02 PM

மணிப்பூர் கொடூர சம்பவத்துக்கு மோடி ஆட்சிதான் பொறுப்பேற்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

கே.எஸ்.அழகிரி | கோப்புப்படம்

சென்னை: "மணிப்பூரில் நடந்துள்ள சம்பவம் இந்தியாவுக்கே மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய அவலநிலைக்கு பிரதமர் மோடி ஆட்சிதான் பொறுப்பேற்க வேண்டும். இரக்கமற்ற இக்கொடூர நிகழ்வை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்" என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 80 நாட்களாக இன மோதலின் காரணமாக மணிப்பூர் மாநிலம் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. சட்டத்தின் ஆட்சி சீர்குலைக்கப்பட்டு, வன்முறை வெறியாட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு வாழ்கிற இரு வேறு சமூக மக்களிடையே கடுமையான மோதல் நிகழ்ந்து வருகிறது. மணிப்பூர் கலவரம் குறித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறுகிற வகையில் மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இந்நிலையில், நாட்டையே உலுக்குகிற வகையில் மணிப்பூரில் இரண்டு பெண்கள் ஈவு இரக்கமற்ற முறையில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர நிகழ்வு நடந்துள்ளது. இதுகுறித்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மணிப்பூரில் சட்டம் - ஒழுங்கை மத்திய - மாநில அரசுகள் நிலைநாட்டவில்லை என்றால் உச்ச நீதிமன்றமே தலையிட நேரிடும் என்று எச்சரித்திருக்கிறார்.

நாடாளுமன்ற கூட்டத்தின் முதல் கூட்டத்திலேயே இப்பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது. விவாதத்துக்கு அனுமதிக்காத நிலையில் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில் மணிப்பூர் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆறுதல் வார்த்தை கூறாத பிரதமர் மோடி இன்றைக்கு நடைபெற்ற கொடூர சம்பவத்தை கண்டித்திருக்கிறார்.

சமூக வலைதளங்களில் இக்கொடூர நிகழ்வை பார்த்த மக்கள் கடும் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். மணிப்பூரில் குகி பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தி, சாலையில் ஊர்வலமாக அழைத்து சென்று, வயல் வெளியில் வைத்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவுக்கே மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது.

இத்தகைய அவலநிலைக்கு பிரதமர் மோடி ஆட்சிதான் பொறுப்பேற்க வேண்டும். மணிப்பூரில் நடைபெற்றுள்ள இரக்கமற்ற இக்கொடூர நிகழ்வை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x