Published : 20 Jul 2023 03:33 PM
Last Updated : 20 Jul 2023 03:33 PM
கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சி சார்பில் நடைபெற்றுள்ள வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து உரிய ஆய்வு செய்து, அதில் முறைகேடுகள் ஏதும் ஏற்பட்டுள்ளதா என கண்டறிய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில பொது செயலாளர் டி.குருமூர்த்தி, தமிழக முதல்வர் உள்பட 13 துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள புகார் மனுவில், "கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த வளர்ச்சி திட்ட பணிகளை செய்த ஒப்பந்தகாரர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. தார் மற்றும் சிமென்ட் சாலைகள் முறையாக பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. பல்வேறு பகுதிகளில் சிமென்ட் சாலையின் மேலேயே தார் சாலைகள் போடப்பட்டுள்ளது.
தமிழக அரசு அறிவித்தப்படி பழைய தார் மற்றும் சிமென்ட் சாலைகளை அகற்றப்படுத்தப்பட்ட பின் புதிய சாலைகள் போடப்பட வேண்டும் என்ற உத்தரவு பல்வேறு இடங்களில் கடைப்பிடிக்கவில்லை. மேலும். ஒப்பந்தம் அடிப்படையில் நடைபெற்றுள்ள அங்கன்வாடி கட்டிடம், ஆரம்ப சுகாதார நிலையம், வணிக வளாகம், நீர்தேக்க தொட்டி போன்ற கட்டுமான பணிகளிலும், வாய்க்கால், குளம், தூர்வாறும் பணிகளிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழும் சில குறிப்பிட்ட ஒப்பந்தகாரர்களுக்கு மட்டுமே தொடர்ந்து பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுவருகிறது. மாநகராட்சியில் பணிபுரியும் ஒரு சில அதிகாரிகளும் ஒப்பந்ததாரர்களும் கூட்டாக சேர்ந்து பண மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மாநகராட்சி சார்பில் நடைபெற்றுள்ள வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து உரிய ஆய்வு செய்து, அதில் முறைகேடுகள் ஏதும் ஏற்பட்டுள்ளதா என கண்டறிந்து முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT