Published : 20 Jul 2023 05:25 PM
Last Updated : 20 Jul 2023 05:25 PM
சென்னை: எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் 186 மையங்களை மூடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 377 ஐபிசி பரிசோதனை நம்பிக்கை மையங்கள், அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற சுகாதார மையங்கள், மத்திய சிறைச்சாலை மருத்துவமனைகள், மற்றும் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகின்றன.
தற்போது தமிழகத்தில் 186 மையங்களை மூடவேண்டும் என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்திற்கு சுற்றறிக்கைகளை அனுப்பியுள்ளன. உலகச் சுகாதார நிறுவனம் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஆலோசனை மையங்களையும் பரிசோதனைக் கூடங்களையும் அதிகரிக்க வேண்டுமென வழிகாட்டியுள்ள சூழலில் ஒன்றிய அரசின் மேற்கண்ட முடிவு அதிர்ச்சியளிக்கிறது.
எச்ஐவி பரிசோதனை மற்றும் ஆலோசனை மையங்களை மூடினால் தமிழ்நாட்டில் எய்ட்ஸ் கட்டுப்பாடு திட்டம் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்படும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் தொய்வும், எய்ட்ஸ் தொற்றாளிகளுக்கு கிடைக்கும் ஆலோசனைகளும், உதவிகளும் கூட தடைபடும். அத்துடன், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆலோசனைகளை ஏற்றால் 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் 2500 தொழிலாளர்களின் வேலை பறிபோகும் சூழலும் ஏற்படும்.
எனவே, தமிழக அரசின் நல்வாழ்வுத்துறையின், மருத்துவத்துறையின் சிறந்த மருத்துவ சேவைகளை, நோக்கங்களை சிதைக்கிற ஒன்றிய அரசின் தவறான போக்குகளுக்கு இடமளிக்க கூடாது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT