Published : 20 Jul 2023 05:09 PM
Last Updated : 20 Jul 2023 05:09 PM

“மணிப்பூரில் நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல... பாரதத் தாய்!” - சீமான் காட்டம்

சீமான் | கோப்புப்படம்

சென்னை: "மல்யுத்த வீராங்கனைகள் முதல் பழங்குடியின பெண்கள் வரை பாஜக ஆட்சியில் நடைபெறும் பாலியல் கொடுமைகள் உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. பாரதம், பண்பாடு என்றெல்லாம் பிதற்றும் பாஜக ஆளும் மாநிலத்தில் நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய்தான்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் குகி பழங்குடி பெண்கள் இருவர் பெரும்பான்மை மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்களால் ஆடையின்றி சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்ச்சியையும், கடும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது. ஒரு பழங்குடி பெண்ணை இந்தியாவின் குடியரசுத் தலைவராக ஆக்கிவிட்டதாக பெருமை பேசிய பாஜக, இரண்டு பழங்குடி பெண்களுக்கு நிகழ்த்தப்பட்டுள்ள மனச்சான்றற்ற அநீதிக்கு என்ன பதில் கூறப்போகிறது?

கண்முன்னே சக மனிதர்களுக்கு நிகழ்த்தப்படும் சிறிதும் மனித தன்மையற்ற இதுபோன்ற கொடுமைகளை அனுமதித்துவிட்டு, நிலவுக்கு செயற்கோள் அனுப்பியதை அறிவியல் வளர்ச்சி என்று இந்த நாகரிக நாடு கொண்டாடுவது வெட்கக்கேடானது. இதுதான் மோடி கண்டுபிடித்த புதிய இந்தியாவா? இந்தியாவில் மத, சாதி பாகுபாடுகள் இல்லையென்று கூசாமல் பொய் பேசிய பிரதமர் மோடி இப்போது வாய் திறப்பாரா?

மல்யுத்த வீராங்கனைகள் முதல் பழங்குடியின பெண்கள் வரை பாஜக ஆட்சியில் நடைபெறும் பாலியல் கொடுமைகள் உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. பாரதம், பண்பாடு என்றெல்லாம் பிதற்றும் பாஜக ஆளும் மாநிலத்தில் நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான். பழங்குடியின மக்களுக்கு எதிராக தொடர்ந்து கட்டுக்கடங்காத கலவரம் நடைபெற்று வரும் மணிப்பூர் மாநிலத்தில் உடனடியாக குடியரசு தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும்", என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x