Published : 20 Jul 2023 04:14 PM
Last Updated : 20 Jul 2023 04:14 PM
கிருஷ்ணகிரி: சூளகிரி புதிய வட்டாட்சியருக்கு "தக்காளி" கொடுத்து பொதுமக்கள், விவசாயிகள் வரவேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் சரிந்து விலை உச்சத்தை தொட்டுள்ளது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தக்காளி பேசு பொருளாக மாறி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், சூளகிரி வட்டாட்சியராக பணியாற்றி வந்த பன்னீர்செல்வி, 7 தேசிய நெடுஞ்சாலை, 46 தனி மாவட்ட வருவாய் அலுவலரின் (நிலம் எடுப்பு) நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டார். அங்கு பணியாற்றி வந்த சக்திவேல், சூளகிரி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சூளகிரி தாலுகா அலுவலகத்தில் வட்டாட்சியர் சக்திவேல் பொறுப்பேற்று கொண்டார். அவரை சந்தித்த சூளகிரி நகரை சேர்ந்த பொதுமக்கள், தக்காளியை வட்டாட்சியருக்கு கொடுத்து வரவேற்பு கொடுத்தனர்.
இது குறித்து பொதுமக்கள், விவசாயிகள் கூறும்போது, "வழக்கமாக புதிதாக பொறுப்பு ஏற்கும் அலுவலர்களுக்கு மரியாதை நிமித்தமாக ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை கொடுத்து வரவேற்பு அளிப்பது வழக்கம். தற்போது தக்காளி விலை கிலோ ரூ.100-ஐ கடந்துள்ளது. இதனால் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை கொடுப்பதைவிட தக்காளி கொடுக்காமல் என முடிவு செய்து வழங்கினோம்.
சூளகிரி பகுதியில் விவசாயிகள் அதிகளவில் தக்காளி அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்ந்துள்ளது. இன்னும் ஒரிரு மாதங்களில் விளைச்சல் அதிகரித்து விலை சரியும். அப்போது விவசாயிளுக்கு நிலையற்ற விலை இருக்கும், பாதிப்பு ஏற்படும். அந்நேரத்தில் விவசாயிகளை காக்க அலுவலர்கள் முன்வர வேண்டும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT