Published : 20 Jul 2023 02:35 PM
Last Updated : 20 Jul 2023 02:35 PM
கும்பகோணம்: கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி புவியியல் துறை பேராசிரியரைக் கண்டித்து அந்த துறையில் படிக்கும் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இக்கல்லூரியில் புவியியல் துறை பேராசிரியர் மணியோசை அண்மைக்காலமாக, வகுப்பறையிலிருக்கும் பட்டியலின மாணவர்களை இழிவாகவும், தரக்குறைவாக பேசியதாகவும், இது தொடர்பாகக் கல்லூரி முதல்வர் மற்றும் உயர் கல்வித் துறை அதிகாரிகளுக்கு, மாணவர்கள் புகார் அனுப்பியும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், புவியியல் துறை பேராசிரியர் மணியோசை மற்றும் இவருக்குத் துணை போகும் துறைத் தலைவர் கோபுவை கண்டித்து கல்லூரி முதல்வர் அறைக்கு முன் தரையில் அமர்ந்து, எம்.எஸ்.சி புவியியல் துறை 2-ம் ஆண்டு படிக்கும் கே.இளந்தென்றல், 3-ம் ஆண்டுகள் படிக்கும் எஸ்.அஜய் மற்றும் கே.கார்த்தி ஆகியோர் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எம்.எஸ்.சி புவியியல் துறை 2-ம் ஆண்டு படிக்கும் கே.இளந்தென்றல் கூறியது: “பேராசிரியர் மணியோசையைப் பணி நீக்கம் செய்ய வேண்டும். இவருக்கு துணை போன துறைத் தலைவர் கோபு மீது துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேறும் வரை காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாகக் கல்லூரி முதல்வர் அ.மாதவி கூறியது: “மாணவர்கள் போராட்டம் தொடர்பாகக் கல்லூரி ஆட்சி மன்றக் குழுக் கூட்ட முடிவின்படி அடுத்தக்கட்ட முடிவு மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT