Published : 20 Jul 2023 01:21 PM
Last Updated : 20 Jul 2023 01:21 PM

வாரிசுகள் நினைத்தால் பல தலைமுறைக்கு சேவையாற்ற முடியும்: எம்ஐடி பவள விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: “வாரிசுகள் நினைத்தால் பல தலைமுறைக்கு சேவையாற்ற முடியும். பொறியியல் படிப்பை பட்டம் வாங்குவதற்கு மட்டுமல்லாமல் ஆராய்ச்சி நோக்கத்துடனும் படிக்க வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி பவள விழா நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், "எம்.ஐ.டி. எனப்படும் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியின் பவள விழா நிகழ்ச்சி மிகுந்த எழுச்சியோடு, ஏற்றத்தோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விழாவில், நானும் கலந்து கொண்டு உங்களுடைய மகிழ்ச்சியில் பங்கேற்கக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பை பெற்றமைக்கு நான் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பெயரெடுத்த மாநிலம் தமிழ்நாடு.

இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால், அது எந்தப் பாடமாக இருந்தாலும், முன்னணி நிறுவனங்களின் பட்டியலில், தமிழகத்தின் கல்வி நிறுவனங்கள் நிச்சயமாக இடம் பெறும். அப்படி இடம்பெறும் நிறுவனங்களில் ஒன்றுதான் இந்த எம்.ஐ.டி. இந்த எம்.ஐ.டிக்கு கிடைத்த பெருமை மட்டுமல்ல, நம்முடைய தமிழகத்துக்கே கிடைத்திருக்கக்கூடிய பெருமை என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

மாணவர்களின் வழிகாட்டியாகவும், இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கிய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏவுகணை மனிதர் என்று போற்றப்படும் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் படித்த கல்லூரி என்பதை விட, உங்களுக்கு வேறு பெருமை தேவையில்லை. அத்தகைய பெருமைமிகு கல்லூரியின் பவளவிழாவில் கலந்து கொள்வதில் நான் மீண்டும், மீண்டும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமையாக நான் கருதுகிறேன். முக்கியத் தலைவர்கள் பலரும் வெவ்வேறு காலக்கட்டங்களில் இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.

எம்.ஐ.டி.யின் முதலாவது பட்டமளிப்பு விழா 1952-ஆம் ஆண்டு நடந்தபோது நவீன இந்தியாவின் சிற்பி அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கல்லூரியின் பொறியியல் மற்றும் மின்னியல் ஆய்வுக் கூடத்தை தொடங்கி வைத்தவர் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராசர். 1975-ஆம் ஆண்டு நடந்த கல்லூரியின் வெள்ளி விழாவில், அன்றைய இந்தியப் பிரதமர் அம்மையார் இந்திரா காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். அந்த நிகழ்ச்சிக்கு அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி முன்னிலை வகித்திருக்கிறார்கள். 1998-ஆம் ஆண்டு பொன்விழாவில், குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கலந்து கொண்டார்கள். இந்த வரிசையில், பவளவிழா நிகழ்ச்சியில் பங்கெடுக்கக்கூடிய வாய்ப்பை இந்த அடியேன் பெற்றிருப்பதை எண்ணி, எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

தொழில் அதிபரும், கொடையுள்ளத்தில் சிறந்தவருமான விளங்கிய மரியாதைக்குரிய சி.ராஜம் இந்தியா ஹவுஸ் என்ற தனது சொத்தை விற்று எம்.ஐ.டி. என்ற நிறுவனத்தை 1949ம் ஆண்டு நிறுவினார்கள். 1955ம் ஆண்டு முதல் அவரது மகன் சி.ஆர்.இராமசாமி இந்த நிறுவனத்தை வளர்த்தெடுத்தார்கள். இதன் தொடர்ச்சியாக, இன்று அவருடைய பேத்தி டாக்டர் பிரேமா சீனிவாசன் இந்த கல்வி நிறுவனத்தை நடத்திக் கொண்டு வருகிறார். வாரிசுகளால் இந்தக் கல்வி நிறுவனமும் வளர்ந்துள்ளது.

வாரிசுகளால் ஏராளமான தமிழக மாணவர்கள் கல்வியைப் பெற்றுள்ளார்கள். இந்த வாரிசுகளால் தமிழகத்தின் இளைய சக்தியானது அறிவாற்றல் பெற்றுள்ளது. நான் அரசியல் பேசுவதாக யாரும் நினைத்துக்கொள்ள வேண்டாம். வாரிசுகள் நினைத்தால் ஒரு தலைமுறைக்கு மட்டுமல்ல, மூன்று நான்கு ஐந்து என்று பல தலைமுறைக்கு சேவையாற்ற முடியும் என்பததுக்கு எடுத்துக்காட்டுதான் இராஜம் குடும்பம். அதற்கு அடையாளமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

எம்.ஐ.டி. நிறுவனமானது, இந்தியாவின் தலைசிறந்த நிறுவனமாக பல ஆண்டு காலமாகச் செயல்பட்டு இன்று பவள விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. கல்வி புகட்டுவது, பயிற்றுவிப்பது, பட்டம் வாங்குவது என்பதாக மட்டுமில்லாமல், ஆராய்ச்சித் திறனை உருவாக்குவது, படிப்பவர்கள் அனைவரையும் பன்முக ஆற்றல் கொண்டவர்களாக வளர்த்தெடுப்பது எம்.ஐ.டி.யின் பணியாக இருக்கிறது.

எம்.ஐ.டி வளாகத்தில் பல்வேறு திட்டங்களுக்கும், பல மையங்கள் உருவாக்குவதற்கும் தமிழக அரசு நிதியுதவி செய்து கொண்டு வருகிறது. வான்வழி ஆராய்ச்சி மையத்தை இங்கு உருவாக்க அரசு உதவி செய்தது. நுண்ணிய துணைக்கோளான 'அனுசாட்' வெற்றிகரமாக உருவாக்க உதவி செய்யப்பட்டது. தானியங்கிப் பொறியியல் என்ற சிறப்புறுமையத்தை அமைக்க தமிழக அரசு ரூபாய் 50 கோடி ஒதுக்கீடு செய்தது. தானியங்கிப் பொறியியல் துறையில் 2700 சதுர அடியில் 8 ஆய்வுக் கூடங்கள் அடங்கிய கட்டடம் ஒன்று கட்டப்பட்டது. சீமன்ஸ் சிறப்புறுமையம் என்ற ஒன்றை தமிழ்நாடு திறன்மிகு வளர்ச்சி கழகத்திடமிருந்து நிதி பெற்று அமைத்துள்ளது.

ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தை எம்.ஐ.டி.யில் நிறுவப்பட்டு விண்வெளி ஆராய்ச்சி மையத்தோடு இணைத்து உருவாக்கியது. தமிழக அரசால் உருவாக்கப்பட்ட சமூகநலத் திட்டங்கள் அனைத்து பயனையும் எம்.ஐ.டி. மாணவர்கள் தொடர்ந்து பெற்று வருகிறார்கள். அரசுப் பள்ளியில் பயின்று, உயர்கல்வியில் சேர முயலக்கூடிய பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு, தமிழக அரசு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி இருக்கிறது.

குடும்பத்தின் முதல் பட்டதாரியாக இருக்கக்கூடிய மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்விக் கட்டணச் சலுகையானது பொறியியல் போன்ற மேற்படிப்பைத் தொடர அவர்களை உற்சாகப்படுத்துகிறது. இதனை இந்தக் கல்வி நிறுவன மாணவர்கள் பெற்றுள்ளார்கள்.

எனது கனவுத் திட்டமான “நான் முதல்வன்” திட்டம் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். அதைப்பற்றி நம்முடைய பொன்முடி இங்கே விளக்கமாக சொன்னார்கள். தமிழக மாணவர்கள் அனைவரும் கல்வியில் மட்டுமல்லாமல், அறிவாற்றலில் முதல் இடத்தை பெற வேண்டும், பன்முக ஆற்றல் கொண்டவர்களாக மாற வேண்டும் என்பதற்காக தான் அந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்தத் திறன் மேம்பாட்டுத் திட்டம் எம்ஐடியில் Art Semester Exam-ல் (ஒற்றைப் பருவத் தேர்வு) சுமார் 2,511 மாணவர்களுக்கும், Even Semester Exam-ல் (இரட்டைப் பருவத் தேர்வு) 2,136 மாணவர்களுக்கும், 15 பாடப் பிரிவுகளில் கட்டாயப் பாடமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது.

அதேபோன்ற முக்கியமான இன்னொரு திட்டம் புதுமைப் பெண் திட்டம். அதைப் பற்றியும் அவர் குறிப்பிட்டுச் சொன்னார். அரசுப் பள்ளியில் படித்து, உயர்கல்வியைப் பெற வேண்டுமென்ற நோக்கத்தோடு வரக்கூடிய பெண்களின் வருகையை உயர்த்துவதற்காக, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரில் “புதுமைப்பெண்” என்ற திட்டத்தைத் தொடங்கி தமிழக அரசு அதற்கு நிதி உதவியும் செய்து வருகிறது.

இதன்மூலம், மாணவிகள் மாதம் 1000 ரூபாய் வீதம் தங்கள் இளங்கலைப் படிப்பு முடியும் வரை எம்.ஐ.டி வளாகத்தில் பெற்று வருகிறார்கள். இந்த உதவித் தொகை மாணவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. திட்ட அடிப்படையில் பயிலக்கூடிய “நாளைய திறன் திட்டம்” என்ற படிப்பை செய்முறை அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு பொறியியல் கல்வி நுழைவு மையத்தால் (டான்செட்) தேர்ச்சிப் பெற்று எம்ஐடியில் முதுகலைப் பொறியியல் படிப்பில் சேரக்கூடிய மாணவர்களுக்கு மாதந்தோறும் 6000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் 300 மாணவர்கள் பயன் பெற்று வருகிறார்கள். இப்படி அரசு வழங்கி வரக்கூடிய உதவிகளை வரிசையாகச் சொல்லிக் கொண்டே போகலாம். ஏனென்றால், இப்போது

நாங்கள் நடத்தி வரும் திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம் என்பது கல்வியும், மருத்துவமும் தான். அனைவருக்கும் அடிப்படை கல்வி என்பது ஒரு காலமாக இருந்தது. அனைவருக்கும் பள்ளிக் கல்வி கிடைப்பது பெருந்தலைவர் காமராசர் ஆட்சி காலம் தான் உறுதி செய்தது. அனைவருக்கும் கல்லூரிக் கல்வியை கருணாநிதி ஆட்சி காலம் உறுதி செய்தது. அனைவருக்கும் உயர் கல்வி, ஆராய்ச்சிக் கல்வி என்பதை வழங்குவதுதான் எங்களுடைய நோக்கம். அனைத்து மாணவர்களையும் பல்துறை ஆற்றல் பெற்றவர்களாக உயர்த்துவதுதான் எங்களுடைய நோக்கம்.

பள்ளி - கல்லூரிக்கு வந்தவர்களை மட்டுமல்ல, பள்ளிகளுக்கு வராத - கல்லூரிக்கு வராதவர்களையும் வரவழைத்து அவர்களுக்கு கல்வி வழங்கும் அறிவுமிகு ஆட்சியாக இன்றைய தமிழக அரசு செயல்படுகிறது. ஜூன் 15ம் நாள் சென்னையில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையும், ஜூலை 15ம் நாள் மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தையும் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்துள்ளோம்.

கல்வியும், மருத்துவமும் இரு கண்கள் என்று நாங்கள் சொல்லுவதன் அடையாளம்தான் இவைகள் எல்லாம். பொறியியல் படிக்கும் பட்டதாரிகளான நீங்கள் - வேலை தேடுபவர்களாக மட்டும் இல்லாமல் - வேலை தருபவர்களாக மாற வேண்டும் என்று நான் உங்களை எல்லாம் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். பொறியியல் படிப்பை பட்டம் வாங்குவதற்காக மட்டுமல்லாமல் ஆராய்ச்சி நோக்கத்துடன் படிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். அனைவருமே பொறியியல் பட்டதாரிகள் தான் - அதில் உங்களது தனித்தன்மை என்ன என்பதை தீர்மானித்துச் செயல்படுங்கள்.

பொறியியலின் பயன்பாடு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர், எலக்ட்ரிக்கல் என்பதில் இருந்து பல்வேறு பிரிவு கொண்டதாக உயர்ந்து விட்டது. இது டிஜிட்டல் காலம். இணைய யுகமாக உலகம் மாறிவிட்டது. அனைத்திலும் தொழில் நுட்பம் நுழைந்துவிட்டது. மருத்துவம் முதல் ராணுவம் வரையில் தொழில் நுட்பம் தான் இன்றைக்கு வழி நடத்திக் கொண்டிருக்கிறது.

ஆப் வசதியை பயன்படுத்தாதவர்கள் இன்றைக்கு இருக்க முடியாது என்று சொல்லக்கூடிய நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. எனவே, இந்த தொழில் நுட்ப பயன்பாட்டை நீங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

உங்களது பொறியியல் அறிவை - புதிய கண்டுபிடிப்புகள் - புதிய நிறுவனங்களை உருவாக்குதல் ஆகியவற்றோடு இணைக்க வேண்டும். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதாக எம்.ஐ.டி. போன்ற நிறுவனங்கள் செயல்பட்ட வேண்டும். அப்படி எம்.ஐ.டி. போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வருவது உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது. 75 ஆண்டுகளாக, நீங்கள் ஆற்றி வரும் தொண்டை மேலும் மேலும் தொடர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அதனால் சில முக்கிய அறிவிப்புகளை இந்த பவளவிழாவின் மூலமாக நான் அறிவிக்க விரும்புகிறேன்.

அதிநவீன உள்விளையாட்டு அரங்கத்தோடு இணைந்த கலையரங்கம் ஒன்றைக் கட்டுவதற்கு 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கற்றல் வளாகம் மற்றும் பவளவிழா பூங்கா அமைக்க 25 கோடியும் ரூபாய் வழங்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கல்வி நிறுவனம் அளவற்ற அர்ப்பணிப்போடும் தொய்வின்றித் தொடர வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

நிறைவாக, இந்த நிகழ்ச்சியின் மூலம் ஓர் அறிவிப்பை வெளியிட நான் விரும்புவது, புகழ்மிக்க இந்த எம்.ஐ.டி கல்லூரி வளாகத்தில் மாணவர்களும், ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில், பெரிய அரங்கம் இல்லை என்பது என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அந்தக் குறையை போக்கக்கூடிய வகையில், 1000 பேர் அமரக்கூடிய ஏர்கண்டிஷன் வசதியோடு கூடிய மிகப் பெரிய அரங்கம் ஒன்று தமிழக அரசின் பங்களிப்போடு விரைவில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொண்டு, பெருமைமிகு இக்கல்வி நிறுவனம் இன்னும் பல்லாண்டுகள் சிறப்புற வளர வேண்டும், வாழ வேண்டும் என்று என் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்து, உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி கூறி விடைபெறுகிறேன்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x