Published : 20 Jul 2023 04:42 AM
Last Updated : 20 Jul 2023 04:42 AM

பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை திரும்ப பெற வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: பருத்தி, நூல் விலை உயர்வால் ஜவுளி தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்க, பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நூற்பாலை தொழிலில் 15 லட்சம் தொழிலாளர்களை கொண்டு 1,500 நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தின் தொழில் பொருளாதாரத்தில் இவைமுக்கிய பங்காற்றி வருகின்றன. பருத்தி விலை கடும் உயர்வு, வங்கி வட்டி உள்ளிட்ட செயல்பாட்டு செலவு அதிகரிப்பு, உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தைகளில் தேவையில் ஏற்பட்டுள்ள சரிவு போன்றவை, நூற்பாலை சங்கம் ஜூலை 15-ம் தேதி முதல் உற்பத்தி நிறுத்தம் அறிவிக்கும் அளவுக்கு கடும் நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.

கரோனா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு, குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களை புதுப்பிக்கவும், மறுசீரமைக்கவும் அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின்கீழ் குறுகியகால கடன்களை மத்திய அரசு வழங்கியுள்ளது. இவ்வாறு பெற்ற கடனை திருப்பி செலுத்தும் பணி தற்போது தொடங்கியுள்ளதால், நூற்பாலைகளுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் பருத்தி இறக்குமதிக்கு மத்திய அரசு விதிக்கும் 11 சதவீத இறக்குமதி வரி, இந்தியா மற்றும் சர்வதேச அளவிலான போட்டியாளர்களுக்கு இடையிலான மற்றொரு குறிப்பிடத்தக்க விலை வேறுபாடு ஆகும்.

இதுகுறித்து கடந்த மே 16-ம் தேதி நான் எழுதிய கடிதத்தில், ‘நூற்பாலைகள் பருத்தி கொள்முதல் செய்வதற்கான ரொக்க கடன் வரம்பை 3 மாதங்களில் இருந்து 8 மாதங்களாக நீட்டிக்க வேண்டும். வங்கிகள் கோரும் விளிம்பு தொகையை கொள்முதல் மதிப்பில் 25 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்க வேண்டும்’ என்று கோரியிருந்தேன். நூற்பு முதல் துணிகள் வரையிலான ஜவுளி தொழிலை பாதுகாப்பதன் அவசியம், அதனால் உருவாகும் வேலைவாய்ப்புகளை கருத்தில் கொண்டு, எனது முந்தைய வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இந்த சூழலில், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின்கீழ் செயல்படும் நூற்பாலைகளின் அவலநிலையை போக்கவும், நூற்பாலை துறையில் மீண்டும் வேலைவாய்ப்பை கொண்டுவரவும் உதவும் வகையில், அவசரகால கடன்உத்தரவாத திட்டத்தின்கீழ், நூற்பாலைகளுக்கு உரிய நிதியுதவி அளிக்க வேண்டும். அந்த நிறுவனங்கள் இத்திட்டத்தின்கீழ் பெற்றகடனை திருப்பி செலுத்தும் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும். ஏற்கெனவே பெற்றகடனை 6 ஆண்டுகால கடனாக திருத்தி அமைக்க வேண்டும். இத்திட்டத்தின்கீழ் புதிய கடன்கள் வழங்கவும், கடன்களுக்கான வங்கி வட்டி விகிதங்களை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை திரும்ப பெற வேண்டும்.அதன்மூலம் உற்பத்தி செலவை கணிசமாக குறைக்கலாம்.

நாட்டின் நூல் உற்பத்தியில் குறுந்தொழில் நிறுவனங்களின்கீழ் வரும் கழிவு பஞ்சு நூற்பாலைகள் 35 சதவீத அளவுக்கு பங்களிக்கின்றன. குறைந்த விலை துணிகளில் பயன்படுத்தப்படும் இந்த கழிவு பருத்தி பற்றாக்குறையை சமாளிக்க, இந்தியாவில் இருந்து கழிவு பருத்தியை ஏற்றுமதி செய்ய தற்காலிக தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x