Published : 20 Jul 2023 04:52 AM
Last Updated : 20 Jul 2023 04:52 AM

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஜூலை 22-ல் அமைச்சரவைக் கூட்டம்: தொழில் முதலீடுகள், அரசியல் சூழல் குறித்து விவாதம்

சென்னை: புதிய தொழில் முதலீடுகள், விரிவாக்கம், அமைச்சர்கள் மீதான அமலாக்கத் துறை நடவடிக்கை, அரசியல் சூழல் குறித்து விவாதிப்பதற்காக வரும் ஜூலை 22-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

தமிழக பொருளாதாரத்தை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதன் அடிப்படையில் வரும் 2024 ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கிடையே, சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, தொழில் தொடர்பாகவும், சேவைகள் தொடர்பாகவும் பல்வேறு தரப்பினருடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. சிங்கப்பூர், ஜப்பான் முதலீட்டாளர்களை முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க வருமாறும் முதல்வர் அழைப்பு விடுத்து வந்தார்.

இதன் தொடர்ச்சியாக, பல்வேறு தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளுக்காக அரசை அணுகியுள்ளன. தொழில் விரிவாக்கம் தொடர்பாகவும் பல நிறுவனங்கள் தொழில்துறையுடன் பேசி வருகின்றன இதுதவிர, தமிழகத்தில் வரும் செப்.15-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், புதிய தொழில் திட்டங்கள், கலைஞர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக விவாதிக்க தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் ஜூலை 22-ம்தேதி காலை 10.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில், தற்போது புழல் சிறை மருத்துவமனையில் உள்ள இலாகா இல்லாத அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தவிர்த்து மற்றவர்கள் பங்கேற்கின்றனர். இதில், தொழில் முதலீடு, அரசு திட்டங்கள் தவிர்த்து அரசியல் ரீதியாக, அமைச்சர்கள் மீதான அமலாக்கத் துறைநடவடிக்கைகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x