Published : 20 Jul 2023 04:07 AM
Last Updated : 20 Jul 2023 04:07 AM
சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்பம், டோக்கன் ஆகியவற்றை வீடு வீடாக விநியோகம் செய்யும் பணி இன்று தொடங்குகிறது.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 1 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் 2023-24 பட்ஜெட்டில் ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. செப்.15-ம் தேதி அண்ணா பிறந்தநாளில் இத்திட்டம் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, முதல்வர் தலைமையில் சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, தகுதிகள், கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கி சிறப்பு திட்ட செயலாக்க துறையின்கீழ் அரசாணையும் வெளியிடப்பட்டது.
குடும்ப அட்டை, ஆதார் தரவுகள் அடிப்படையில் இத்திட்டப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. குடும்பத்தில் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் ஒருவர் இந்த உரிமை தொகையை பெறலாம். குடும்ப வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஆண்டு மின்நுகர்வு 3,600 யூனிட்டுக்கு கீழ் இருக்க வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தகுதியான ஒரு பயனாளிகூட விடுபடக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தினார். இதையடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அடிப்படை பணிகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தொடங்கியுள்ளனர்.
வருவாய், கூட்டுறவு துறைகளுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல்கட்டமாக நியாயவிலை கடை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக இதற்கான விண்ணப்பத்தை விநியோகம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. ஜூலை 24 முதல் ஆக.4 வரை, அடுத்ததாக ஆக.5 முதல் 16-ம் தேதி வரை என 2 கட்டங்களாக முகாம் நடத்தி, விண்ணப்பங்களை பதிவு செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இதுகுறித்து கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, குடும்ப அட்டை அடிப்படையில் நியாயவிலை கடை பணியாளர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று, விண்ணப்ப படிவங்கள், முகாமில் பங்கேற்பதற்கான விவரங்கள் அடங்கிய டோக்கன்களை வழங்குகின்றனர்.
இவ்வாறு விண்ணப்பம் பெற்றுக் கொண்டவர்கள், டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரம், இடத்துக்கு சென்று, வங்கி பாஸ்புக் விவரம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை காட்டி விண்ணப்பத்தை பதிவு செய்து, ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT