Published : 20 Jul 2023 05:40 AM
Last Updated : 20 Jul 2023 05:40 AM
பழநி: பழநியில் முடி காணிக்கை செலுத்தும் பக்தரின் புகைப்படத்துடன் இலவச டிக்கெட் வழங்கும் புதிய நடைமுறையால் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு 7 இடங்களில் முடி காணிக்கை செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. முக்கிய நாட்கள் மற்றும் திருவிழாக் காலங்களில் நாளொன்றுக்கு சராசரியாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகின்றனர். கோயில் நிர்வாகம் சார்பில் இங்கு 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் முடி இறக்கும் பணி செய்கின்றனர்.
முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு ‘க்யூஆர் கோடு’டன் இலவச டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. அதைக் காண்பித்து முடி காணிக்கை செலுத்தினர்.
இந்நிலையில், முடி காணிக்கை செலுத்த டிக்கெட் வாங்கும்போது பக்தரின் புகைப்படம், முடி இறக்கும் ஊழியரின் பெயர், அவரது பதிவு எண், இடத்தின் பெயர், தேதி, நேரம் குறிப்பிட்டு `க்யூ ஆர் கோடு'டன் டிக்கெட் வழங்கப்படுகிறது.
முடிக் காணிக்கை செலுத்திய பிறகு, மொட்டை தலையுடன் பக்தரை புகைப்படம் எடுத்து, அதில் முடி இறக்கம் செய்த தொழிலாளியின் புகைப்படத்துடன் மற்றொரு டிக்கெட் வழங்கப்படுகிறது.
அப்போது, அதில் உள்ள `க்யூ ஆர் கோடை' `ஸ்கேன்' செய்துவிட்டு கோயில் பணியாளர்கள் பக்தர்களை வெளியே அனுப்புகின்றனர். மொட்டை அடிக்கும் பக்தர்கள் மட்டுமின்றி பூ முடி காணிக்கை செலுத்தும் பெண் பக்தர்களின் புகைப்படமும் எடுக்கப்படுகிறது.
இந்த புதிய நடைமுறையால் பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் கூறும்போது, முடி காணிக்கை செலுத்துவதில் முறைகேடுகளைத் தவிர்க்க ‘க்யூ ஆர் கோட்’ டிக்கெட் வழங்குவது தவிர்க்க முடியாதது.
ஆனால், முடி காணிக்கை செலுத்தும் முன்பு, செலுத்திய பிறகு என 2 முறை புகைப்படம் எடுப்பதால், தனி வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. விடுமுறை நாட்கள் மற்றும் திருவிழாக் காலங்களில் இந்த புதிய நடைமுறையால் பக்தர்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாக நேரிடும். எனவே, பழைய முறையில் டிக்கெட் வழங்க வேண்டும் என்றார்.
பழநி கோயில் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் முடி காணிக்கை செலுத்துவோரின் புகைப்படத்துடன் கூடிய இலவச டிக்கெட் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. முடி காணிக்கை செலுத்தவும், முடி இறக்கம் செய்யும் ஊழியர்களுக்கும் கட்டணம் வழங்க தேவை இல்லை என அறநிலையத்துறை அறிவித்துள்ளது. அதை மீறியும் பக்தர்களிடம் ஊழியர்கள் பணம் வசூலிப்பதாக புகார் வருகிறது.
தேவஸ்தானம் சார்பில் மொட்டை அடிக்கும் பெண்களுக்கு மூன்று, ரூ.100 தரிசன டிக்கெட்டுக்கான பாஸ் வழங்கப்படுகிறது. சிலர் இங்கு இலவச டிக்கெட்டை பெற்றுக் கொண்டு, வெளியூர் பக்தர்களை வெளியிடங்களில் வைத்து மொட்டை அடித்து பணம் பறிப்பில் ஈடுபடுகின்றனர்.
இதுபோன்ற முறைகேடுகளை தவிர்க்கவும், தினமும் எத்தனை பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகின்றனர் என்பதை கணக்கிடவும், முடி இறக்கம் செய்ய பக்தர்களிடம் பணம் கேட்கும் ஊழியர்களை அடையாளம் காணவும், அவர்கள் பணி விவரங்களை அறியவும் இப்புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT