Published : 27 Nov 2017 10:27 AM
Last Updated : 27 Nov 2017 10:27 AM
சென்னையில் ஏற்படும் வாகன நெரிசல் குறித்து வாகன ஓட்டிகளுக்கு பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் போக்குவரத்து பிரிவு போலீஸார் உடனுக்குடன் தகவல்களை தெரிவித்து வருகின்றனர். மாற்றுப் பாதை குறித்தும் இதில் அறிவுரை வழங்கப்படுகிறது. இந்த பதிவை தினமும் 86 ஆயிரத்து 469 பேர் பின் தொடர்வதாக போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாகன விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். முதல் கட்டமாக வாகன நெரிசல் அதிகமுள்ள சாலைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து போக்குவரத்து போலீஸார் கள ஆய்வு நடத்தினர். இதற்கென போக்குவரத்து இணை ஆணையர்கள் பிரேம் ஆனந்த் சின்ஹா, நஜ்மல் கோடா தலைமையில் தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டன.
இது தொடர்பாக தன்னார்வலர்களிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் மயிலாப்பூர் லஸ் சிக்னலில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலை ஒரு வழிப்பாதையிலிருந்து இருவழிப்பாதையாக அண்மையில் மாற்றம் செய்யப்பட்டது. இதேபோல் அடுத்தடுத்து பல சாலைகளில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
தற்போது, அடுத்த நடவடிக்கையாக போக்குவரத்து நெரிசல் குறித்து பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் (chennai traffic alert) போக்குவரத்து போலீஸார் உடனுக்குடன் தகவல்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். அதன்படி, பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யும் தகவல்களை 82 ஆயிரத்து 969 பேர் பார்த்து வருகின்றனர். இது தொடர்பான ட்விட்டர் பதிவுகளை 3,500 பேர் பின் தொடர்கின்றனர்.
இதுகுறித்து தென் சென்னை போக்குவரத்து இணை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறும்போது, “போக்குவரத்து நெரிசல் குறித்து பகல் நேரம் முழுவதும் ஆய்வு செய்கிறோம். இதற்கென 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கூகுள் மேப் உதவியுடன் நெரிசல் உள்ள சாலைகள் குறித்து உடனுக்குடன் எங்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். இதைத் தொடர்ந்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுப்போம். ம
முதல் கட்டமாக சம்பந்தப்பட்ட இடங்களில் தற்காலிகமாக போக்குவரத்தில் மாற்றம் செய்வோம். இதன் மூலம் வாகன எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும். நெரிசல் குறித்து போக்குவரத்து காவல்துறையின் பேஸ்புக், ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதில், மாற்றுபாதை குறித்தும் குறிப்பிடுவோம். இதனால், சாலையை பயன்படுத்துபவர்கள் நெரிசலில் இருந்து தப்பிக்க முடியும். செல்ல வேண்டிய இடங்களுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT