Published : 18 Nov 2017 10:13 AM
Last Updated : 18 Nov 2017 10:13 AM
நாடுமுழுவதும் 2015-16-ம் ஆண்டில் விதி மீறி தண்டவாளத்தைக் கடந்ததால் ரயில் மோதி 1,448 பேர் இறந்துள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், ரயில் பாதையையொட்டி இருக்கும் நுழைவுப் பாதைகளை மூட ரயில்வேக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.
ரயில் விபத்துகளால் ஆண்டுதோறும் சராசரியாக 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்து வருவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. ரயில்கள் விபத்துகளில் சிக்குவதால் ஏற்படும் உயிரிழப்புகளை விட, விதிமுறைகளை மீறி ரயில் பாதைகளைக் கடப்பதால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம் என தெரியவந்துள்ளது.
குறிப்பாக, பாதுகாப்பு விதிகளை மீறி, வாகனங்கள் மூலம் ரயில் கேட் மற்றும் பாதைகளை கடந்து செல்வது, செல்போன் பேசிக்கொண்டே பாதைகளில் நடந்து செல்வது, மின்சார ரயில்களில் கூட்ட நெரிசலில் தவறி விழுதல் உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
தெற்கு ரயில்வே 2-வது இடம்
அதன்படி, 2015-16-ம் ஆண்டில் நாடுமுழுவதும் உள்ள 22 ரயில்வே மண்டலங்களில் விதிமீறி தண்டவாளத்தைக் கடந்து சென்றதில் ரயில் மோதி 1,448 பேர் இறந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில், அதிகபட்சமாக மேற்கு ரயில்வேயில் 691 பேரும், 2-வது இடத்தில் தெற்கு ரயில்வேயில் 348 பேரும் இறந்துள்ளனர். 2014-15-ம் ஆண்டில் தண்டவாளத்தைக் கடந்து சென்றதில் 1,147 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் சிலர் ‘தி இந்து’விடம் கூறியதாவது: ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையும் இணைந்து ரயில் பாதைகளில் விதிமுறைகளை மீறுவோர் மீது வாரந்தோறும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும், பல்வேறு ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். ஆனாலும், பயணிகள் விதி மீறி ரயில்பாதையைக் கடந்து செல்கின்றனர்.
இதற்கிடையே, ரயில்பாதையையொட்டி உள்ள தேவையற்ற நுழைவுப் பாதைகளை முறைப்படுத்த வேண்டும். ஆபத்தான இடங்களில் உள்ள நுழைவுப் பாதைகளை மூட வேண்டும். மேலும், அதிக மக்கள் பயணம் செய்யும் முக்கிய ரயில் நிலையங்களில் இருந்து சுமார் 100 முதல் 200 அடி தூரத்துக்கு தடுப்பு அமைக்கவும் ரயில்வே நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
மக்களின் ஒத்துழைப்பு
ரயில்வே நிர்வாகமும் இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளது. இருப்பினும், ரயில் பாதையை விதி மீறி கடக்கக் கூடாது என்ற மனநிலையும் மக்களிடம் ஏற்பட வேண்டும். ரயில்வே பாதுகாப்புத் திட்டங்களுக்கு மக்களும் ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT