Published : 18 Nov 2017 10:12 AM
Last Updated : 18 Nov 2017 10:12 AM
மின்சாரத்தைச் சேமிக்கக் கூடிய எல்இடி பல்புகளின் விற்பனையை பெட்ரோல் பங்குகளில் இந்தியன் ஆயில் நிறுவனம் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக சென்னை, சேலம் மற்றும் கோயம்புத்தூரில் இந்த விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
எரிசக்தியை சேமிக்கும் நோக்கில் மத்திய அரசு ‘உஜாலா’ என்ற திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் மின்சாரத்தை சேமிக்கும் திறனற்ற 77 கோடி பல்புகளை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 23.4 கோடி எல்இடி பல்புகளும், 20.6 லட்சம் எல்இடி டியூப் லைட்களும், 7.7 லட்சம் மின்விசிறிகளும் நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு நிறுவனமான எனர்ஜி எபிஷியன்சி சர்வீஸ் லிமிடெட் (இஇஎஸ்எல்) நிறுவனம் இதை செயல்படுத்தி வருகிறது. தமிழக மின்வாரியத்துடன் இணைந்து ‘உஜாலா’ திட்டத்தின் கீழ் எல்இடி பல்புகள் விற்பனையை கடந்த ஏப்ரல் மாதம் இந்நிறுவனம் தொடங்கியது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து, பெட்ரோல் பங்குகளில் எல்இடி பல்புகளை விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பொதுமேலாளர் (சில்லறை விற்பனை) ஆர்.அனந்தபத்மநாபன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
மின்சாரத்தைச் சேமிக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு உதவும் வகையிலும் எல்இடி மின்சார பல்புகளை பயன்படுத்த பொதுமக்களை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. அதன்படி, எல்இடி பல்புகள் விற்பனையை மத்திய அரசின் இஇஎஸ்எல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. பெட்ரோல் பங்குகளில் எல்இடி பல்புகளை விற்பனை செய்வதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லியில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் அப்போதைய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இந்த விற்பனையை தொடங்கியுள்ளோம்.
முதற்கட்டமாக சென்னை, கோவை, சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 60-க்கும் மேற்பட்ட இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்குகளில் இந்த விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 15 பெட்ரோல் பங்குகளில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. 9 வாட்ஸ் திறன் கொண்ட பல்ப் ரூ.70-க்கும், 20 வாட்ஸ் திறன் கொண்ட டியூப்லைட் ரூ.220-க்கும், 50 வாட்ஸ் திறன் கொண்ட மின்விசிறி ரூ.1,200-க்கும் விற்கப்படுகிறது.
மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. மேலும், ஐஓசி அலுவலகங்கள், எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் எல்இடி பல்புகள் படிப்படியாக பொருத்தப்படும். இவ்வாறு அனந்தபத்மநாபன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT