Published : 02 Nov 2017 10:46 AM
Last Updated : 02 Nov 2017 10:46 AM

ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகள் வறண்டதால் ஏமாற்றத்துடன் திரும்பும் வெளிநாட்டு பறவைகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மன்னார் வளைகுடா, தனுஷ்கோடி மற்றும் காஞ்சிரங்குடி, சித்திரங்குடி, மேல செல்வனூர், கீழ செல்வனூர் பகுதிகளில் பறவை சரணாலயங்கள் உள்ளன.

இங்கு பிளமிங்கோ, ரஷ்யா நீர்வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, உள்ளான், அரிவாள் மூக்கன், நாரை, பாம்புதாரா, நீர் காகங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் நவம்பர் முதல் மார்ச் வரை கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து பின்னர் ஏப்ரலில் குஞ்சுகளுடன் தாயகங்களுக்கு திரும்பிச் செல்லும். கடந்த ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததால் கண்மாய்கள் வறண்டன, நீர்நிலைகள் நிரம்பவில்லை. பல மரங்கள் பட்டுப் போனதாலும், வெளிநாட்டில் இருந்து வரும் பறவைகள், கூடு கட்டி, அதில் தங்கி, முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பில்லாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பறவைகள் ஆர்வலர் முகவை முனிஸ் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பறவை சரணாலயங்களை ஒட்டியுள்ள மரங்கள் அதிகமாக வெட்டப்பட்டுள்ளன.

புதிதாக மரங்கள் வளர்க்கப்படவில்லை. சரணாலயங்களில் உள்ள கண்மாய்கள், குளங்களை சீரமைக்கவும், மழைநீரை சேமிக்கவும் போதுமான நிதி ஒதுக்க வேண்டும். சரணாலய நீர்நிலைகளில் உணவுக்காக வளர்க்கப்படும் மீன்குஞ்சுகளை சரியான தருணத்தில் விட வேண்டும். மன்னார் வளைகுடா தீவுகள், தனுஷ்கோடிக்கு பிளமிங்கோ பறவைகள் நூற்றாண்டு காலமாக தவறாமல் வருகின்றன.

பிளமிங்கோ பறவைகளின் வருகையை ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் அதிர்ஷ்டமாக கருதுகின்றனர். மாவட்டத்துக்கு வரும் வெளிநாட்டு பறவைகளை வனத்துறையினர் கணக்கெடுக்கின்றனர்.

அதுபோல ஆண்டுதோறும் மன்னார் வளைகுடா தீவுகள், தனுஷ்கோடி கடல்பகுதிக்கு வரும் பறவைகளை வனத்துறையினர் கணக்கெடுக்க வேண்டும். மேலும் தனுஷ்கோடியில் பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x