Published : 06 Nov 2017 10:06 AM
Last Updated : 06 Nov 2017 10:06 AM

திருநெல்வேலி அருகே ரூ.4.98 கோடி சிலைகளை கடத்திய 3 பேர் கைது:22 ஆண்டுகளுக்கு பின் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் சிக்கினர்

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி கனகராஜ் திருச்சியில் நேற்று அளித்த பேட்டி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் பகுதியிலுள்ள அத்தாளநல்லூர் கிராமத்தில் சுமார் 1,600 ஆண்டுகள் பழமையான முன்றீஸ்வரமுடையார் கோயில் உள்ளது. இக்கோயிலின் வெளிப்பிரகார வாயிலில் இருந்த தொன்மையான துவாரபாலகர் கற்சிலைகள்(2 எண்ணிக்கை) கடந்த 1994-ம் ஆண்டு இறுதியில் திருடப்பட்டது. இதுதொடர்பாக, 1995-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்த திருநெல்வேலி மாவட்ட போலீஸார், இதனை கண்டுபிடிக்க முடியாத வழக்கு எனக்கூறி முடித்துவிட்டனர்.

இதற்கிடையே, தற்போதைய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மேற்பார்வையில் ஏடிஎஸ்பி இளங்கோ தலைமையில் இவ்வழக்கு குறித்து மீண்டும் விசாரணை நடத்தினோம். அதில், இக்கோயிலில் திருடப்பட்ட சிலைகள், ஆஸ்திரேலியா நாட்டின் கான்பராவில் உள்ள அரசு கண்காட்சியகத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. இதுகுறித்து விசாரித்தபோது ஆஸ்திரேலியா அரசு நிர்வாகமே, இச்சிலைகள் தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்டது என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளது.

இதையடுத்து சிலைகளைத் திருடி விற்பனை செய்த காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தைச் சேர்ந்த நச்சு (எ) லட்சுமி நரசிம்மன் (53), அவரது கூட்டாளிகளான சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஊமைத் துரை(68), அவரது சகோதாரரான தஞ்சாவூரைச் சேர்ந்த அண்ணாத்துரை (59) ஆகியோரை இன்று (நேற்று) கைது செய்துள்ளோம். திருட்டு நடைபெற்று சுமார் 22 ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலை கடத்தல் வழக்கில் கைதாகி, கடந்த 5 ஆண்டுகளாக சிறையிலுள்ள சுபாஷ் சந்திரகபூருக்கும், இவ்வழக்கில் தொடர்பு உள்ளது. அவர்தான், இச்சிலைகளை கடத்தி ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பரா கண்காட்சியகத்துக்கு ரூ.4.98 கோடிக்கு விற்றதாகத் தெரிகிறது.

ஆஸ்திரேலியாவில் உள்ள இச்சிலைகளை மீட்டு, விரைவில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x