Published : 20 Jul 2023 02:09 AM
Last Updated : 20 Jul 2023 02:09 AM
மதுரை: மதுரை கொட்டாம்பட்டி அருகே கருங்காலக்குடியில் நேற்று முறையான அறிவிப்பின்றி கண்மாய் மர ஏலம் நடத்தியதை கண்டித்து விவசாயிகள் திரண்டு முற்றுகையிட்டதால் ஏலம் ரத்தானது.
மதுரை கொட்டாம்பட்டி அருகே சொக்கலிங்கபுரம் ஊராட்சிக்குட்பட்ட வண்ணாரப்பு கண்மாய் ஏலம் நேற்று கருங்காலக்குடியில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறையான அறிவிப்பின்றி ஏலம் நடப்பதாக சொக்கலிங்கபுரம் ஊராட்சியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்க வந்தனர். அப்போது தலா ரூ.5 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தி ஏலத்தில் பங்கேற்றனர்.
சிறிய அறையாக இருந்ததால் பலர் இருக்கையின்றி நின்றனர். இருக்கை வசதி செய்து தருமாறு விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஏலதாரர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனால் ஏலத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
இதுகுறித்து விவசாயி அருண் கூறுகையில், "வண்ணாரப்பு கண்மாய் 500 ஏக்கர் பரப்பளவுடையது. சுமார் 15 ஆண்டுக்கு மேல் வளர்ந்த சீமைக்கருவேல்மரங்கள் உள்பட பலவகை மரங்கள் உள்ளன. சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மரங்கள் உள்ளன. இதனை சிண்டிகேட் அமைத்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்பட முயற்சித்ததை தடுத்துள்ளோம். இனிமேலாவது ஒருவாரத்திற்கு முன்னதாக அறிவிப்பு செய்து ஏலம் நடத்த ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT