

கோவை: தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் நேற்று (ஜூலை 19)அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவை பொருத்தவரை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஏற்கெனவே உள்ள உறுப்பினர்கள் புதுப்பித்தல், புதிய உறுப்பினர்கள் சேர்க்கின்ற பணி நடைபெறும். தற்போது அந்த பணி தொடங்கி, நடைபெற்று வருகிறது. தற்போதுவரை 1.75 கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். எங்களுடைய இலக்கு இரண்டு கோடி. அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.
நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்துதான் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமைத்தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில், பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் இந்த நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உரிமைத் வழங்கப்படும் என்றுதான் அப்போது மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அமலாக்கத்துறை மற்றும் பிற துறைகள் துறைகள் தங்களுக்கு கிடைக்கப் பெற்ற ஆதாரத்தின் அடிப்படையில், யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது ஆங்காங்கே சோதனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் பாஜக அதிக இடங்களில் போட்டியிடும் என்பது கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்துவதற்காக அந்த கட்சித் தலைவர்கள் சொல்லக்கூடிய கருத்து. தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் கூட்டணிக்கு தலைமை தாங்கும்.
இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு அரசாங்கம் என்றால் அது திமுக அரசுதான். ஆறுதல் சொல்வதற்காக மருத்துவமனைக்கு இரவில் சென்று அமைச்சர் செந்தில்பாலாஜியை முதல்வர் சந்திக்கவில்லை. அவர் வாய்திறந்து ஏதேனும் சொல்லிவிடுவாரோ, ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில், பதற்றத்தில் போய் பார்த்தார். கோவை சரக டிஐஜியின் தற்கொலைக்கு காரணம் மன அழுத்தம் எனவும், அவர் இறப்பதற்கு முன்பு 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறுகின்றனர்.
அப்படி இருந்தவருக்கு மீண்டும் பணிச்சுமை அளித்து, ஏன் மன அழுத்தத்தை அளித்தனர். தற்போது ஜவுளி தொழில் நலிவடைந்த சூழலில் உள்ளது. மறுசுழற்சி ஜவுளித்துறை கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி உள்ளனர். அவர்களின் கோரிக்கைகளில் அரசு கவனம் செலுத்தி நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.