Published : 19 Jul 2023 08:01 PM
Last Updated : 19 Jul 2023 08:01 PM
மதுரை; மதுரை கே.கே.நகர் 80 அடி இரு வழிச்சாலையில் முதல்வர் ஸ்டாலின் வந்த ஒரு வழிச்சாலையின் சென்டர் மீடியனில் மட்டும் வர்ணங்கள் பூசி அழகுப்படுத்திவிட்டு மற்றொரு புறம் அப்படியே விட்ட சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாநகராட்சியில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளில் கே.கே.நகர் 80 அடி சாலை குறிப்பிடத்தக்கது. இந்த சாலை மாட்டுத்தாவணி சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே தொடங்கி, ஆவின் சந்திப்பு, அரவிந்த் கண் மருத்துவமனை வழியாக வைகை ஆறு ஸ்மார்ட் சிட்டி சாலையுடன் சென்று இணைகிறது. கடந்த வாரம் சனிக்கிழமை முதல்வர் ஸ்டாலின், மதுரையில் நடந்த கலைஞர் நூலகம் திறப்பு விழாவுக்கு சென்னையில் இருந்து மதுரை விமானநிலையத்தில் இறங்கி, கே.கே.நகர் 80 அடி சாலை வழியாகதான் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். கே.கே.நகர் 80 அடி, வழக்கமாக குண்டும், குழியுமாக கற்கள் பெயர்ந்தும் போக்குவரத்துக்கு லாயக்கற்றநிலையில் காணப்படும்.
முதல்வர் வருகைக்காக, குண்டும், குழியமான பகுதிகளில் கற்களை போட்டு நிரப்பி, தற்காலிகமாக மாநகராட்சி அதிகாரிகள் பேட்ச் ஒர்க் பார்த்து இந்த சாலையை சீரமைத்தனர். இந்தச் சாலை இரு வழிச்சாலையாக உள்ளது. சாலையின் நடுவில் சென்டர் மீடியன் உள்ளது. இந்த சென்டர் மீடியனும் பராமரிப்பு இல்லாமல் மழைக்காலத்தின் சேறும், சகதியும் சிதறி அலங்கோலமாக காணப்படும்.
இந்நிலையில் முதல்வர் விமானநிலையத்திலிருந்து இச்சாலையில் வந்ததால் அவர் வருகிற ஒரு வழிச்சாலையின் சென்டர் மீடியனில் மட்டும் வர்ணம் பூசி அழகுப்படுத்தினர். மற்றொரு புறத்தை வர்ணம் பூசாமல் அதன் பழைய நிலையிலேயே விட்டனர்.
மேலும், சென்டர் மீடியன் மேல், மண் நிரப்பி அதில் செடி, கொடிகள் நட்டு, அதற்கு சொட்டு நீர் பாசனமும் கிடைக்கும் வகையில் அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். முதல்வர் ஸ்டாலின் விமானநிலையத்தில் இருந்து இந்த சாலை வழியாக வரும்போது சென்டர் மீடியத்தின் சுவர் மீது பூசப்பட்ட வர்ணமும், அதன் மீது வைக்கப்பட்ட செடி, கொடிகள் பார்ப்பதற்கு ரம்மியமாக காணப்பட்டது. தற்போது முதல்வர் வந்து சென்றபிறகு செடி, கொடிகள் தண்ணீர் இல்லாமல் பட்டுப்போய் கிடக்கிறது. சென்டர் மீடியத்தை நேர்கோட்டில் நின்றுப்பார்த்தால் ஒரு புறம் முதல்வர் பார்ப்பதற்காக மட்டும் அழகுப்படுத்திவிட்டு, மற்றொருபுறம் அப்படியே விட்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. முதல்வரை ஏமாற்ற அதிகாரிகள் செய்த இந்தச் செயல், இந்தச் சாலையல் பயணிக்கும் மதுரை மக்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT