Published : 19 Jul 2023 07:12 PM
Last Updated : 19 Jul 2023 07:12 PM
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்பிக்க ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை வீடு வீடாக வழங்கும் பணி நாளை முதல் தொடங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக வருகின்ற ஜூலை 24-ம் தேதி முதல் முகாம்கள் தொடங்க உள்ளன. இரண்டாம் முகாம் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் நடைபெறும்.
இரண்டு கட்டமாக செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டத்தில், சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு கடைகள் பிரிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறுவதற்கான நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, சில இடங்களில் முதற்கட்டமாக 60 சதவீதமும், இரண்டாம் கட்டமாக 40 சதவீதமும் செயல்படுத்தவும், சில இடங்களில் 50 :50 என்ற விகிதத்திலும், சில இடங்களில் 500 குடும்ப அட்டை உள்ள கடைகளில் முதற்கட்டமும், 1000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகளில் இரண்டாம் கட்டமும் என சூழ்நிலைகளுக்கு ஏற்ப பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் வழங்கும்போது, வங்கிக் கணக்கு இல்லாத பயனாளர்களை வங்கிக் கணக்கு துவக்க வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகளை கண்காணிக்க மூன்று மாவட்டங்களுக்கு ஒரு கூடுதல் பதிவாளர் என அனைத்து மாவட்டங்களுக்கும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆதார் எண் உள்ளவர்கள் மற்றும் இந்தத் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டது. ஆதார் எண் இல்லாதவர்கள் அருகில் உள்ள ஆதார் மையத்தில், ஆதார் எண் பெறுவதுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்து ஆதார் எண் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் விரிவான விழிப்புணர்வு மற்றும் விளம்பரங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT