Published : 19 Jul 2023 07:30 PM
Last Updated : 19 Jul 2023 07:30 PM
தஞ்சாவூர்: தஞ்சாவூரில், 30 பேருக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து மாநகராட்சி டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட 33வது வார்டு கோரிகுளம் மற்றும் 36வது வார்டு பூக்கார வடக்கு தெருவில், கடந்த சில நாட்களாக, அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு திடீரொன காய்ச்சல்,வாந்தி போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றபோது, அவர்களுக்கு மஞ்சள் காமாலை நோய்க்கான அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சுமார் 15-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் உட்பட கோரிக்குளம் பகுதியில் 16 பேரும், பூக்கார வடக்கு தெருவில் 14 பேரும் மஞ்சள் காமாலை நோய் தாக்குதலுக்கு ஆளாகி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
இதையடுத்து, மாநகராட்சி சார்பில், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள கோரிக்குளம்,பூக்காரவடக்கு தெருவில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு காய்ச்சல், ரத்தம், சிறுநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டும், காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கும், வீடு வீடாகவும் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியை மாநகராட்சி மேயர் ராமநாதன், மாநகராட்சி நகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது; குடிநீர் கழிவு நீருடன் கலந்து சுகாதாரமற்ற முறையில் வருகிறது. மாநகராட்சி ஊழியர்கள் முறையாக குடிநீர் தொட்டி, சாக்கடை பகுதிகளை சுத்தம் செய்வது இல்லை. சுகாதாரமற்ற குடிநீரை குடித்ததால் தான் குழந்தைகள் உட்பட பலருக்கும் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வார்டு கவுன்சிலர்களிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், மாநகராட்சி மருத்துவமனையில் குழந்தைகளை காய்ச்சலுக்காக காண்பித்த போது டாக்டர்கள் எதுவும் இல்லை எனக் கூறி அனுப்பிவிட்டனர். ஆனால், காய்ச்சல் குறையாத நிலையில், தனியார் மருத்துவனையில் காண்பித்த போது மஞ்சள் காமாலை இருப்பதாக தெரிந்தது இவ்வாறு தெரிவித்தனர்.
இது குறித்து மாநகராட்சி மேயர் நிருபர்களிடம் கூறியதாவது; "குடிநீருடன் சாக்கடை கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் சொல்லுகிறார்கள். முழுமையாக ஆய்வு செய்து விட்டோம். அப்படி எதுவும் இல்லை. இருப்பினும், இப்பகுதியில் குடிநீரை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். அந்த அறிக்கை வந்த பிறகு அதன் தொடர்பான பணிகளை மேற்கொள்ள உள்ளோம். இரண்டு வார்டுகளிலும் நான்கு பகுதிகளில் தலா 10 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் கொண்ட முகாம் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகிறோம். அத்துடன், வீடு வீடாக சென்று மக்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT