Published : 19 Jul 2023 06:13 PM
Last Updated : 19 Jul 2023 06:13 PM
சேலம்: ‘தமிழகத்தில் அரசியல் சார்ந்த கொலைகள் அதிகரித்துள்ளது’ என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கவலை தெரிவித்துள்ளார்.
சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஆடிட்டர் ரமேஷ் நியாயமாக செயல்படக் கூடியவர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நியாயம் கேட்பவர். பாஜகவை சேர்ந்தவர் என்பதால் அவர் கொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகளாகியும், இதுவரை உண்மையான கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் தமிழக காவல் துறை சரியாக செயல்படவில்லை.
முதல்வர் படம் சித்தரிக்கப்பட்டால் உடனடியாக காவல் துறை கைது செய்கிறது. செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமைச்சர் பொன்முடியும் அமலாக்கத் துறையின் பிடியில் சிக்குவார் என ஏற்கெனவே தெரிவித்திருந்தேன். இதற்கு பொன்முடி மீது ஏற்கெனவே அமலாக்கத் துறையில் வழக்கு இருந்ததே காரணம். இதேபோன்று, அமைச்சர்கள் கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் மீதும் வழக்குகள் உள்ளன. அமலாக்கத் துறையின் பிடியில் இருவரில் ஒருவர் அடுத்து சிக்குவார்.
செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சை செய்த பிறகு அவரது புகைப்படங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த விஷயத்திலும் அவரை வெளியில் காண்பிக்காத வகையில் போலீஸ் அதிகாரிகள் செயல்படுகிறார்கள். அமைச்சர் பொன்முடி வீட்டில் அரசியல் காரணத்துக்காக அமலாக்கத் துறை சோதனை செய்யவில்லை. அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி அந்தச் சோதனை நடந்திருக்கிறது.
அரசியல் கொலைகள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துள்ளது. கிராம நிர்வாக அதிகாரி உட்பட பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மிக மோசமாக உள்ளதை காட்டுகிறது” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT