Published : 19 Jul 2023 01:25 PM
Last Updated : 19 Jul 2023 01:25 PM
சென்னை: சென்னையில் கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான டோக்கன் மற்றும் விண்ணப்பம் நாளை முதல் வீடு வீடாக வழங்கப்படும் என்றும், தகுதியுடைய அனைவருக்கும் கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்தில் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்ப பதிவு முகாம்கள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறும். மொத்தமுள்ள 200 வார்டுகளில் 98 வார்டுகளில் முதல் கட்டமுகாம் ஜூலை 24-ம் தேதி முதல் ஆக.4-ம் தேதி வரையிலும், மீதமுள்ள 102 வார்டுகளில் இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை நடைபெறும்.
விண்ணப்பங்கள் போதிய அளவுக்கு கையிருப்பில் உள்ளது. இந்தத் திட்டத்தில் தகுதியுடையவர்கள் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். யாரும் பதற்றமடைய தேவையில்லை. நாளை முதல் நியாய விலைக் கடைப் பணியாளர்கள் ஒவ்வொரு நியாய விலைக் கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்குவார்.
டோக்கன் வழங்கும் பணி முகாம் நடைபெறும் நாளுக்கு நான்கு நாட்கள் முன்பாகத் தொடங்கும். பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களைப் பெறுவதற்காக நியாய விலை கடைக்கு வரத் தேவையில்லை. குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக் கடைப்பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெறும் இடத்துக்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும். பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை.
விண்ணப்பப் பதிவு முகாமுக்கு வருகை புரியும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். தேவையான பயோமெட்ரிக் எந்திரம் தயாராக உள்ளது. இயந்திரம் பயன்படுத்த அனைத்து அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு இல்லாத பொதுமக்களுக்கு முகாம்களிலே வங்கி கணக்கு ஏற்படுத்தி தரப்படும். பொதுமக்களுக்கு உதவ 500 கார்டு எண்ணிக்கைக்கு ஒரு தன்னார்வ அலுவலர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். நிரந்தர குடியிருப்பு மற்றும் முகவரி இல்லாதவர்களுக்கும் மாற்று ஏற்பாடு செய்யப்படும்" என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT