Published : 19 Jul 2023 09:20 AM
Last Updated : 19 Jul 2023 09:20 AM
சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளான மேடவாக்கம், பள்ளிக்கரணை, செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை இணைப்பது தாம்பரம்- வேளச்சேரி பிரதான சாலை. மொத்தம் 16 கிமீ நீளமுள்ள இந்த சாலையில், மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரி 7 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த 7 கிமீ சாலையில் மேடவாக்கம் சந்திப்பு முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடுத்த காமகோடி நகர் சந்திப்பு வரையிலான 3.8 கிமீ தூர சாலை பிரச்சினைக்குரியதாக உள்ளது.
இதில் மேடவாக்கத்தில் இருந்து வேளச்சேரி நோக்கிச் செல்லும் சாலையில், முதலில் 800 மீட்டரில் ஆசான் கல்லூரி பேருந்து நிறுத்தம் முன்பு, சாலை பாதியாக குறுகியுள்ளது. இந்த பகுதியில் சாலையின் மறுபுறம் செல்வதற்கான வழியும் உள்ளதால், காலை மற்றும் மாலை வேளையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இதுதவிர, இ்ந்த சந்திப்புக்கு முன் பெட்ரோல் பங்க் உள்ளதால், எதிர்புறத்திலும் வாகன ஓட்டிகள் வருகின்றனர்.
அடுத்ததாக, 200 மீட்டர் தூரத்தில் நேரு தெரு சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பு முன்பு சாலையை கடந்து வாகனங்கள் எதிர்புறம் செல்வதற்கான வசதி இருந்தது. தற்போது மூடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பகுதியிலும் 50 மீட்டர் தூரத்துக்கு சாலை குறுகலாக உள்ளது. அதன்பின் அந்த சாலையில் 2.5 கிமீ தூரத்தில் அதாவது சிட்டிபாபு நகர் பிரதான சாலையை அடுத்த, நாராயணபுரம் சென்னை தொடக்கப்பள்ளி அருகில் இருந்து காமகோடி நகர் வரையிலான 1.3 கிமீ தூரம் முழுவதுமாக மிகவும் குறுகலாக உள்ளது. இதில், ஐஐடி காலனி சந்திப்பில் வாகனங்கள் கடப்பதற்கான வசதி உள்ளது.
அதையடுத்த செங்கழனியம்மன் கோயில் சந்திப்பு பகுதியில் பொதுமக்கள் சாலையை கடக்கும் வகையில் சாலை தடுப்பில் வசதி உள்ளது. இதில், நாராயணபுரம் செங்கழனியம்மன் கோயில் உள்ள பகுதியில் சாலை மிகவும் குறுகலாக, பெரிய வாகனம் என்றால் ஒருவாகனம் மட்டுமே செல்லும் வகையில் உள்ளது.
அதேபோல் எதிர்புறத்தில், தாம்பரம் நோக்கிச் செல்லும் சாலையில், காமகோடி நகர் சந்திப்பில் இருந்து 100 மீட்டர் தொலைவு வரை சாலை அகலமாக இருக்கும், அதன்பின் பிள்ளையார் கோயில் தெரு சந்திப்பு வரையிலான 2.2 கிமீ தொலைவு சாலையில், நாராயணபுரம் பகுதியில் ஒரு 100 மீட்டர் தவிர்த்து மீதமுள்ள அனைத்து இடங்களும் மிகவும் குறுகலாக உள்ளது.
இதில் நாராயணபுரம் அம்மா உணவகம் பகுதி, ஐஐடி காலனி சந்திப்பு, பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோயில் எதிரில் உள்ள தாமரைக்குளம் அருகில் உள்ள சாலை, துலுக்கானத்தம்மன் கோயில் தெரு சந்திப்பு, கண்ணபிரான் நகர் சந்திப்பில் இருந்து பிள்ளையார் கோயில் தெரு சந்திப்பு வரையும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது.
இதைத்தொடர்ந்து வியாசர் தெரு சந்திப்பு, பள்ளிக்கரணை அரசு மேனிலைப்பள்ளி முதல் ஆசான் கல்லூரி பேருந்து நிலைய சந்திப்புக்கு முன் உள்ள பிரபல கார் விற்பனை நிலையம், டாஸ்மாக் கடை வரையிலான பகுதியும் மிகவும் குறுகலாக உள்ளது. இவ்வாறாக ஆங்காங்கே குறுகலாகவும் பின்னர் மிகப்பெரியதாக விரிந்தும் உள்ள சாலையில், பல்வேறு சாலை சந்திப்புகளும் இருக்கின்றன. குறிப்பாக, துலுக்கானத்தம்மன் கோயில் தெரு சந்திப்பு எப்போதும் மிகவும் நெரிசல் மிகுந்த பகுதியாகும்.
இங்கு வாகனங்கள் அதிகளவில் கடப்பதால், பகல் மட்டுமின்றி இரவு நேரத்திலும் வாகன நெரிசல் ஏற்படும். இருபுறமும் சாலை குறுகியுள்ளதால், காலை மற்றும் மாலை வேளைகளில் இருபுறமும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர்.
இதற்கிடையில், ஆண்டுதோறும் பருவமழையின் போது பள்ளிக்கரணை அணை ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி சாலையில் தேங்குவதை தடுக்க, ஏரியில் இருந்து பெரிய வடிகால் அமைத்து அதனை வேளச்சேரி செல்லும் சாலை வழியாக சதுப்புநிலத்துக்கு கொண்டு செல்லும் வகையில் நீர்வளத்துறை திட்டமிட்டு, கடந்தாண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில், பெரும்பாலான பணிகள் முடிவுற்ற நிலையில், நாராயணபுரம் பகுதியில் ஆங்காங்கே இணைப்பு பணிகள் முழுமையாக முடியாமல் சாலை தடுப்புகள் வைத்து அந்த இடங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இதனாலும், அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மழைக்காலங்களில், சிட்டிபாபு நகர் பிரதான சாலை சந்திப்பில் சாலையின் இருபுறமும் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் எளிதாக கடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. வேளச்சேரியில் இருந்து மேடவாக்கம், தாம்பரம் நோக்கி செல்வோர் இந்த சாலையை மட்டுமே பயன்படுத்தும் சூழல் உள்ளது.
இதுதவிர, மேடவாக்கத்தை பொறுத்தவரை, தற்போது சந்திப்பு பகுதியை கடப்பதற்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இ்பபகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக பள்ளிக்கரணையில் காமகோடி நகர் சந்திப்பு முதல் மேடவாக்கம் சந்திப்பு வரையிலான 3.8 கிமீ சாலையை கடக்க இருபுறமும் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இது தவிர, சாலை விரிவாக்கம் முழுமையாக நடைபெறாததால், ஆதிபுரீஸ்வரர் கோயில் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம், செங்கழனியம்மன் கோயில் பேருந்து நிறுத்தம் மற்றும் எதிர்புறம் தாம்பரம் மார்க்கத்தில் நாராயணபுரம் அம்மா உணவகம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம், பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ரைஸ்மில் பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் இல்லை. இதனால் பொதுமக்கள் சாலையில் நிற்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே நிழற்குடை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
பொதுமக்கள் சொல்வது என்ன? - பள்ளிக்கரணை ஐடி நிறுவன ஊழியர் ராம் விக்னேஷ்: வேளச்சேரி சாலையில் ரேடியல் சாலை சந்திப்பில் இருந்து பெருங்குடிக்கு 2 கிமீ தூர சாலையை கடக்க நெரிசலில் சிக்கியே செல்லவேண்டியுள்ளது. எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இந்த சாலையில் குடிநீர் மற்றும் சரக்கு லாரிகள் எப்போதும் செல்வதால் மற்ற வாகனங்களில் செல்வோருக்கு சிரமம் ஏற்படுகிறது. சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். பொதுமக்கள் எளிதாக சாலையை கடக்க வழி செய்வதுடன் சந்திப்புகளில் பாலம் அமைக்க வேண்டும்.
மேடவாக்கம் ஸ்ரீராம்: சாலையில் குறுகலாக உள்ள பகுதிகளில் பெரும்பாலும் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு வருவோரும் சாலையில் வாகனத்தை நிறுத்தி விடுகின்றனர். இதனால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறோம். குறுகலான சாலையில் அரசுப் பேருந்து நிறுத்தங்களும் உள்ளதால், பேருந்து செல்லும் வரை அப்பகுதியில் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, சாலை விரிவாக்கம் அவசியம்.
ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் கூறும்போது, எங்களுக்கு வாகனங்களை ஓட்டிச்செல்வதில் பிரச்சினை இ்ல்லை. ஆனால், சாலையை கடக்க தாமதமாகும் போது பயணிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். சாலை விரிவாக்கம் என்பது இங்கு அவசியம் என்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது,‘‘சாலை விரிவாக்கத்துக்காக நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நில உரிமையாளர்களுக்கு பணம் தரவேண்டியுள்ளது.
பணத்தை கொடுத்துவிட்டால் நிலம் எடுத்துவிடலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஏரியில் இருந்து கால்வாய் அமைத்துள்ள இடங்களில் மின் கம்பங்கள் மாற்றியமைக்க வேண்டியுள்ளது. உயர் அழுத்த மின்கம்பங்கள் செல்வதால், ஒவ்வொரு பகுதியாக முடிக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.
இதனிடையே பருவமழை தொடங்கும் முன் பணிகளை முடிக்க அறிவுறுத்தியதன்பேரில் பள்ளிக்கரணை காமகோடி நகர் சந்திப்பில் அம்மா உணவகம் முன்புள்ள கடைகள் அகற்றப்பட்டு, அப்பகுதியில் பள்ளங்களை சீரமைக்கும் பணி நடந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT