Last Updated : 03 Nov, 2017 07:38 PM

 

Published : 03 Nov 2017 07:38 PM
Last Updated : 03 Nov 2017 07:38 PM

ஆளுநரை ஏற்காமல் செயல்பட்ட புதுச்சேரி தலைமைச் செயலர் டெல்லிக்கு மாற்றம்: உயர் பதவி கிடைக்க வாய்ப்பு

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை ஏற்காமல் செயல்பட்டு வந்த புதுச்சேரி தலைமைச் செயலர் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளார். பதவி உயர்வு பெற்றிருந்த நிலையில் டெல்லியில் முக்கியப் பதவி அவருக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தற்போது அவருக்கான பதவி ஒதுக்கீடு செய்யவில்லை எனவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது புதிய தலைமைச் செயலராக அஸ்வனி குமார் டெல்லியிலிருந்து நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தலைமை செயலராக மனோஜ் பரிதா நியமிக்கப்பட்டார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் இணைச்செயலராக பதவி உயர்வு கிடைத்தது.

புதுச்சேரியில் முதல்வர்-ஆளுநர் மோதலின் போது அவர் சட்டவிதிகளின் படி முதல்வருக்கும், மத்திய மனித வளமேம்பாட்டுத்துறைக்கு மட்டுமே பதில் கூற கடமைப்பட்டுள்ளதாக கூறினார். அத்துடன் ஆளுநர் விமர்சித்தப்போதும், அவர் ஆளுநர் மாளிகை செல்வதை தவிர்த்து செயல்பட்டார்.

மேலும் நகராட்சி ஆணையர் சந்திரசேகரை காத்திருப்பு பட்டியலில் வைக்க சட்டப்பேரவை தரப்பு உத்தரவிட்டவுடன் அதை செயல்படுத்தினார்.

தனது ஒப்புதல் பெறாமல் காத்திருப்புப் பட்டியலில் வைக்க இயலாது என்று கிரண்பேடி தெரிவித்தபோதும், சபாநாயகர் உத்தரவுதான் முதன்மையானது என்ற பொருள்படும்படி செயல்பட்டார்.

இதனால் ஆளுநர்- தலைமைச் செயலர் இடையிலான விரிசல் அதிகமானது. தலைமைச்செயலர் செயல்பாட்டை ஆளுநர் கிரண்பேடி சமூக வலைதளங்களில் வெளிப்படையாக விமர்சித்தார்.

ஆனால் சட்டப்படிதான் செயல்பட முடியும் என்று தலைமைச் செயலர் குறிப்பிட்டார். மத்திய உள்துறை அமைச்சகத்தில் தலைமைச் செயலர் மாற்றம் தொடர்பாக ஆளுநர் முயற்சி எடுக்கத் தொடங்கியதாக பரவலான பேச்சு எழுந்தது. அதே நேரத்தில் பதவி உயர்வு வந்துள்ளதால் மாற்றல் பெறவும் தலைமைச் செயலர் விரும்பினார்.

தற்போது புதுச்சேரியில் இருக்கும் பணியை விட தற்போதைய பதவி உயர்வுக்கு டெல்லியில்தான் பணிபுரிய வேண்டும் என்பதால் தலைமைச் செயலர் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. இந்நிலையில் தலைமைச்செயலர் மனோஜ் பரிதா டெல்லிக்கு மாற்றலாகி உத்தரவு வெளியாகியுள்ளது.

அதே போல் புதுச்சேரி வளர்ச்சி ஆணையர் நரேந்திர குமார் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக ஏற்கெனவே புதுச்சேரியில் ஆட்சியராக பணியாற்றிய அன்பரசு இப்பதவிக்கு டெல்லியில் இருந்து நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அஸ்வனி குமார் டெல்லியில் பொதுப்பணித்துறை முதன்மை செயலராக இருந்தார், டெல்லியில் தலைமைச் செயலர் பொறுப்பு உள்ளிட்ட பதவிகளை அஸ்வனி குமார் வகித்து வந்துள்ளார். இவர் 1992-ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச் ஆவார்.

 

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x