Published : 01 Nov 2017 09:37 AM
Last Updated : 01 Nov 2017 09:37 AM

போர்க்குணத்தோடு போராடி இணைந்தோம்: அடையாளத்தை இழந்து நிற்கிறது தமிழகம் - குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நாளில் தியாகி வேதனை

இந்திய சுதந்திரத்துக்குப் பின்பு நடந்த மிகப்பெரிய உணர்ச்சிப் போராட்டம் தெற்கு எல்லைப் போராட்டம். ஏராளமான உயிர்த் தியாகங்களுக்குப் பின்னர் 1956-ம் ஆண்டு நவ.1-ம் தேதி குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்தது.

குமரி மாவட்டம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளை, தாய் தமிழகத்தோடு இணைக்கக் கோரி நடைபெற்ற போராட்டங்களில் பங்கெடுத்து சிறைக்கும் சென்றவர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா. எத்தனையோ, எதிர்பார்ப்புகளோடு குமரியை கேரளத்தில் இருந்து, பிரித்து கொண்டு வந்து தமிழகத்துடன் இணைத்தவர்களின் மனநிலை இப்போது எப்படி இருக்கிறது? குமரி மாவட்டத்தில் உள்ள 15 லட்சம் வாக்காளர்களையும் திருப்திப்படுத்த வேண்டியது ஒரு பக்கம் இருக்கட்டும். களம் கண்ட தியாகிகள் மனநிறைவோடு உள்ளனரா?

ஒரு சோறு பதமாக பேசுகிறார் தியாகியும், சமூக செயற்பாட்டாளருமான கொடிக்கால் ஷேக் அப்துல்லா, ‘நாடு விடுதலை பெற்றபோது தேசியத்தின் மீது அபரிமிதமான நம்பிக்கை எழுந்தது. ஆனால் மாநிலங்கள் அளவில் அந்த கருத்து வலுப்பெறவில்லை. தமிழகத்தில் காமராஜர் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது குமரி மாவட்டம், திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இருந்தது. அப்போதைய பிரதமர் நேருவோடு, இருந்த நட்பை பயன்படுத்தி தமிழகத்தில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களைக் கொண்டு வந்தார் காமராஜர். குமரி தமிழகத்துடன் இணைந்த பின்னரும் காமராஜர் ஆட்சியில் பல நல்ல திட்டங்கள் கிடைத்தன.

அண்ணா ஆட்சி மலர்ந்த போது, அவர் “வடவன் நம்மவனும் அல்ல. நல்லவனும் அல்ல” என்று பேசினார். அப்போது சமஸ்தானங்களில் இருந்து ஒன்றுபட்ட இந்தியாவில் எங்கள் பகுதியெல்லாம் இணைந்திருந்த காலக் கட்டம். இப்படி பேசுகிறாரே அண்ணா? என வேதனைப்பட்டது உண்டு. ஆனாலும் ஒரு ஆறுதல் என்னவென்றால், அண்ணா இதில் மக்களை சொல்லவில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்களைத்தான் சொன்னார். ஆனால் இப்போதைய மனநிலையில் அண்ணாவின் கருத்தை நினைத்து பார்க்கிறேன். இன்று மாநில உரிமைகள் எவ்வளவு பறிக்கப்பட்டு விட்டது. வலுவான மாநிலத் தலைமையும் இல்லை. காங்கிரஸ், இடதுசாரி இயக்கங்களும் தேடும் நிலைக்கு சுருங்கிப் போய் விட்டன. மக்கள் அக்கறையில் நம்பிக்கையும், கவலையும் உள்ள தலைமைகள் தமிழகத்தில் இப்போது இல்லை. கட்சிகளின் மீது நம்பிக்கையற்ற போக்கு நிலவுகிறது.

நடிகர்கள் எப்போது அரசியலுக்கு வருகிறோம் என அவ்வப்போது அறிவித்து பரபரப்பை பற்ற வைக்கும் அளவுக்கு அரசியல் கட்சிகள் பலவீனப்பட்டு நிற்கின்றன. அதேநேரத்தில் காமராஜர் ஆட்சியிலும், அதன் பின்னர் திராவிட கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சியிலும் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் சமகாலத்தில் அதில் பெரிய அளவில் தேக்க நிலை!. இதுவரை தமிழகத்தில் தலைமைத்துவங்கள் இருந்தது.

நேசமணி காலத்தில் நடந்த ஒன்றை நினைவு கூர்தல் இங்கு நல்லது. திருவட்டாறு தொகுதியில் ராமசாமியை வேட்பாளராக்கினார் நேசமணி. இப்போதுள்ள ஒரு சிற்றுந்தை அனுப்பினால், அதில் தொகுதிக்குள் இருக்கும் மொத்த அவர் சாதிக்காரர்களையும் ஏற்றி விடலாம். ஆனால் அங்கு ராமசாமி ஜெயித்தார். பிரதான சாதி தோற்றது. அதுதான் மொழி உணர்வோடு, தாய் தமிழகத்தோடு இணையும் வேட்கையோடு விழுந்த ஓட்டுக்கள். ஆனால் குமரி மக்களின் மனநிலை இப்போது எப்படி இருக்கிறது என்பது ஆய்வுக்குரியது.

என்னளவில் தாய் தமிழகத்தோடு இணைந்ததனால் வளர்ந்தோம். பல திட்டங்கள் கிடைத்துள்ளன. அதையெல்லாம் கணக்கிடும்போது தமிழகத்தோடு இருப்பதில் பெருமிதம்தான். ஆனால் மன நிம்மதி என்பது வலுவான தலைமை, தெளிவான சிந்தனை, இலக்கை நோக்கிய பயணம் என நம்பிக்கைக்குரிய தலைமை தமிழகத்துக்கு வரும்போதுதான் என் போன்று போராடியவர்களுக்கு சாத்தியப்படும். ஏன் என்றால், அன்றைய நாட்களில் எதைப் பார்த்து பிரமித்து போர்க்குணத்தோடு, தமிழகத்தில் சங்கமித்துவிட களம் கண்டோமோ, அதையெல்லாம்தான் இன்று இழந்து நிற்கிறது தமிழகம். அந்த மன வருத்தம் துரத்துகிறது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x