Published : 19 Jul 2023 04:39 AM
Last Updated : 19 Jul 2023 04:39 AM
சென்னை: தமிழ்நாடு நாள் விழாவையொட்டி முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்க பாடுபட உறுதியேற்போம் என தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ விழாவாக நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, ‘தமிழ்நாடு நாள்’ விழா,மாநிலம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி,முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில், “தமிழ்நாடு சொல்அல்ல. அது தமிழரின் உயிர். 1967-ல்இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு மாநிலக் கட்சியாக, திமுக ஆட்சியைப் பிடித்தது. ஜூலை 18-ல்‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டப்பட்டது. மறைமலை அடிகள், பெரியார், சோமசுந்தர பாரதியார், சங்கரலிங்கனார், மபொசி என இந்தப் போராட்டத்தின் வேர் மிகவும் ஆழமானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நாளில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக்க பாடுபட உறுதியேற்போம்” என்று கூறியுள்ளார்.
இதேபோல், திக தலைவர் கி.வீரமணி, விசிக தலைவர் திருமாவளவன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு நாள் விழா மற்றும் கருத்தரங்கம் சென்னை மாநிலக் கல்லூரியில்நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தார். சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
விழாவையொட்டி, கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘தமிழ்நாடு நாள்’ புகைப்படக்கண்காட்சியைப் பார்வையிட்ட அமைச்சர்கள், பின்னர், கல்லூரி அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தமிழன்னை உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.
தொடர்ந்து, நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு ‘இந்துதமிழ் திசை’ வெளியிட்ட ‘மாபெரும்தமிழ் கனவு’ என்ற புத்தகத்தை, தமிழ் வளர்ச்சித் துறை செயலர் செல்வராஜ், நினைவு பரிசாக வழங்கினார். பின்னர், ‘தமிழ்நாடு நாள்’ குறித்த சிறப்பு மலர், மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதையடுத்து, கல்வித்துறையில் பயன்படும் வகையில் புதியமென்பொருளை உருவாக்கிய திருச்சியைச் சேர்ந்த ஏ.ஆரோக்கியதாஸ் என்பவரைப் பாராட்டி அவருக்கு, ‘முதல்வர் கணினித் தமிழ் விருது’, ரூ.2 லட்சத்துக்கான காசோலை மற்றும் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு, உயர் கல்வியின்போது மாதம்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை ‘புதுமைப்பெண்’ திட்டத்தில் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி நடப்பாண்டில் மட்டும் 2 லட்சத்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயன் பெற்றுள்ளனர். அந்தவகையில் தற்போது கல்லூரிகளில் மாணவிகளின் சேர்க்கையும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் செய்தித்துறை இயக்குநர் த.மோகன், தமிழ் வளர்ச்சித் துறை செயலர் இரா.செல்வராஜ், இயக்குநர் ந.அருள், மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், மாநிலக் கல்லூரி முதல்வர் இரா.ராமன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மா.ராஜேந்திரன், எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT