Published : 19 Jul 2023 05:20 AM
Last Updated : 19 Jul 2023 05:20 AM
சென்னை: அமைச்சர் பொன்முடியை முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அமலாக்கத் துறை நடத்திய விசாரணை குறித்து கேட்டறிந்தார்.
அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி.யின் வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. 13 மணி நேர சோதனைக்கு பிறகு, பொன்முடியை சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விடிய விடிய நடந்த விசாரணைக்கு பிறகு, அதிகாலையில் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
பெங்களூருவில் இருந்து...: இந்நிலையில், அமைச்சர் பொன்முடியை, பெங்களூருவில் இருந்தபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தியது தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். துணிச்சலுடன், சட்டரீதியாக விசாரணையை எதிர்கொள்ளுமாறு முதல்வர் அறிவுரை வழங்கினார்.
மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க, தார்மீக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் திமுக என்றும் துணை நிற்கும் என்று பொன்முடியிடம் முதல்வர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள், எம்.பி.க்கள் சந்திப்பு: இதற்கிடையே, அமைச்சர் பொன்முடியை சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் துரைமுருகன், திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ். இளங்கோவன் நேற்று காலை சந்தித்து பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது: திமுகவுக்கு தொல்லை தரும் வகையில் பாஜக செயல்படுகிறது. 37-வது புதிய கட்சியாக அமலாக்கத் துறையை பாஜக சேர்த்துக்கொண்டு தேர்தலில் வெற்றிபெற நினைக்கிறது. பொன்முடி மீதான விசாரணை விவகாரத்தில் மடியில் கனம் இல்லை. அதனால் அவருக்கு பயம் இல்லை.
உலகத்தில் மிகப்பெரிய ஊழல்கட்சி பாஜகதான். ஊழலில் மிகப்பெரிய உச்சத்தை பாஜக தொட்டுவிட்டது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதால் குற்றவாளி ஆகிவிடமாட்டார். விடிய, விடிய அமலாக்கத் துறை அலுவலகத்தில் பொன்முடியை விசாரித்தது மனித உரிமை மீறல்.
பெங்களூருவில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தின் முடிவுமக்களுக்கு தெரியக் கூடாது என்பதற்காக அமலாக்கத் துறை சோதனை நடைபெறுகிறது. கங்கையில் மூழ்கி எழுந்தால் புனிதர்கள் ஆகிவிடுவதுபோல பாஜக.வில் சேர்ந்துவிட்டால் அவர்கள் புனிதர்களாகி விடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, 'பொன்முடி நலமுடன் உள்ளார்' என்றார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.மூர்த்தி, ரகுபதி, சி.வி.கணேசன், ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், சக்கரபாணி, டி.ஆர்.பி.ராஜாஉள்ளிட்ட அமைச்சர்கள் பொன்முடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதேபோல், எம்.பி.க்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், ஆ.ராசா, கலாநிதி வீராசாமி, ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) உள்ளிட்டோரும் பொன்முடியை சந்தித்து பேசினர்.
சென்னை சாஸ்திரி பவனில், அமலாக்கத் துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியிடம் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து நேற்று அதிகாலை வீடு திரும்பிய நிலையில் கொஞ்ச நேரம் மட்டுமே ஓய்வு எடுத்துள்ளார். பின்னர் சக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் வந்து ஆலோசனை நடத்தியதால் சற்று தளர்ச்சியுடன் காணப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT