Published : 19 Jul 2023 05:50 AM
Last Updated : 19 Jul 2023 05:50 AM
சென்னை: மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்துவரும் நிலையில், அம்மாநிலத்தில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்றதற்கு தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருவதால் அம்மாநிலத்தில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்றால் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிப்போம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்றைய தினம் பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கருப்பு சட்டை அணிந்த தனது புகைப்படத்துடன் வெளியிட்ட ட்விட்டர் பதிவு:
கர்நாடக மாநில காங்கிரஸ் ஆட்சியாளர்கள், தமிழக விவசாயிகள் நலனுக்கு எதிராக மேகேதாட்டு அணையைக் கட்ட முயற்சிப்பது மற்றும் கடந்த சில மாதங்களாக தமிழகத்துக்கான காவிரி நீர் பங்கீடை சரிவர வழங்காமல் கர்நாடக அரசு புறக்கணிப்பது ஆகியவற்றை நன்கு அறிந்திருந்தும், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், கொள்கையற்ற சுயநலக் கூட்டணிக்காக தமிழக விவசாயிகள் நலனை புறக்கணிக்கும் திமுக அரசின் மெத்தனப் போக்கைக் கண்டிக்கிறோம். தமிழக விவசாயிகள் கர்நாடக காங்கிரஸ் அரசால் வஞ்சிக்கப்படுகின்றனர்.
அதேநேரத்தில், முதல்வர் ஸ்டாலின், திமுக கூட்டணிக் கட்சிதலைவர்கள், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியுடன் விருந்து உண்டு கொண்டிருக்கின்றனர். தமிழக விவசாயிகள் மீதான இவர்கள் பற்று இவ்வளவுதான். கர்நாடக காங்கிரஸ் ஆட்சியின் தமிழக விரோத நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
இதற்கிடையே தமிழக பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆங்காங்கே கருப்பு நிற பலூன்களும் பறக்கவிடப்பட்டன.
சென்னையில் பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கட்சியின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறும்போது, "தமிழகத்தின் அனுமதியில்லாமல் காவிரி நடுவர்மன்றத்தின் உத்தரவும் இல்லாமல் மேகேதாட்டுவில் அணை கட்ட முடியாது.
பாஜகவால்தான் காவிரி நீர் தமிழகத்துக்கு வருகிறது. திமுக, இனியாவது தங்களது நிலைப்பாட்டை மாற்றி கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்" என்றார்.
தென் ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள அண்ணாமலை கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT