Published : 02 Nov 2017 10:46 AM
Last Updated : 02 Nov 2017 10:46 AM
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இருவேல்பட்டு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஏரி உள்ளது. தென்பெண்ணை ஆற்றிலிருந்து எல்லீஸ் அணை மூலம் திறந்து விடப்படும் தண்ணீர் ரெட்டி வாய்க்கால் மூலம் இருவேல்பட்டு ஏரிக்கு வந்தடையும்.
இதன் மூலம் சுமார் 1000 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், சுமார் 30 கிராமங்கள் வரை குடிநீர் வசதியும் பெற்று வந்தது. நாளடைவில் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வரத்து குறைந்ததால் ரெட்டி வாய்க்காலும் தூர்ந்து போனது. இதனால் ஏரிக்கான நீர்வரத்தும் தடைபட்டது. இதையடுத்து ஏரியையும், ஏரிக்கான நீர்வரத்து வாய்க்காலையும் தூர்வாரக்கோரி இருவேல்பட்டு கிராம மக்கள் மாவட்ட நீர்வள ஆதாரத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டனர். எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தங்களது சொந்த செலவில் 20 கி.மீ தூரமுள்ள ரெட்டி வாய்க்காலை தூர்வாரும் பணியை துவக்கினர். இப்பணிகளை முன்னின்று செய்துவரும் இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் கூறும்போது, “ரெட்டி வாய்க்காலை தூர்வாரி நீர் வரத்தை உறுதிசெய்ய வேண்டும் என பொதுப்பணித்துறை, ஆட்சியர் உள்ளிட்டோரிடம் கடந்த 15 ஆண்டுகளாக மனு அளித்தோம்.
நிதியில்லை என்ற காரணத்தை கூறி அலைக்கழித்து வந்தனர். கடந்த சில வாரங்களாக தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எங்கள் கிராம ஏரிக்கு தண்ணீர் வர வாய்ப்பில்லாத நிலை இருந்ததை உணர்ந்து, கிராம மக்கள் அனைவரும் ஆலோசித்து வாய்க்காலை நாங்களே சொந்த செலவில் தூர்வாருவது என முடிவு செய்தோம்.
அதன்படி கடந்த 3 தினங்களாக இப்பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆளுங்கட்சியினர் தூண்டுதலின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் எங்களை தொடர்புகொண்டு, வாய்க்காலை தூர்வாரும் பணிக்கான செலவினத்தை நாங்கள் கொடுத்து விடுகிறோம். நாங்கள் பணி செய்ததாக பதிவு செய்து கொள்வதாக தெரிவித்தனர். ஆனால் அதற்கு நாங்கள் சம்மதிக்கவில்லை. இவ்வளவு நாட்களாக நிதியில்லை எனக் கூறிவிட்டு தற்போது எப்படி நிதியை கொண்டு வந்தீர்கள்? என கேள்வி எழுப்பினோம்.
இதையடுத்து அவர்கள் திரும்பிச் சென்றனர்.எங்களை பொறுத்தவரையில் வாய்க்காலை மீண்டும் உயிர்பெறச் செய்து, ஏரிக்கான நீர்வரத்து உறுதி செய்யப்பட வேண்டும். இதில் யாருடைய குறுக்கீட்டையும் ஏற்க மாட்டோம். அதே நேரத்தில் முறைகேட்டையும் அனுமதிக்கமாட்டோம்” என்றார்.
இதுதொடர்பாக மாவட்ட நீர்வள ஆதார பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம் கூறுகையில், “ரெட்டி வாய்க்காலை தூர்வார நிதியில்லை என்பது உண்மை தான். அவர்கள் எங்களை அணுகி நாங்களே தூர்வாரிக் கொள்கிறோம் என்றனர். அதற்கு சம்மதம் தெரிவித்தோம். மற்றபடி பொதுப்பணித்துறை அந்தப்பணியை மேற்கொள்வதாக அவர்களிடம் கூறவில்லை” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT