Published : 19 Jul 2023 06:45 AM
Last Updated : 19 Jul 2023 06:45 AM

ரயில் மீது கல்வீசி சேதப்படுத்தினால் 5 ஆண்டுகள் வரை சிறை: ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

சென்னை: ரயில் மீது கல்வீசி சேதப்படுத்தினால், ரயில்வே சட்டப்பிரிவின்கீழ், 5 ஆண்டு வரைசிறை தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் முக்கிய விரைவு ரயில்கள் மீது கல்வீசி சேதப்படுத்தும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன குறிப்பாக, மைசூர்-சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில், சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூருக்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் ஆகிய இரு ரயில்கள் மீது கடந்த மே மாதத்தில் அடுத்தடுத்து கல்வீசி கண்ணாடிகளை சேதப்படுத்திய சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. இதுதொடர்பாக, சிறுவர்கள் சிலர் பிடிபட்டனர். அவர்களை ரயில்வே போலீஸார் எச்சரித்து விடுவித்தனர்.

இதற்கிடையில், சென்னை சென்ட்ரல் - மைசூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் பேசின்பிரிட்ஜ் பணிமனையில் பராமரிப்பு பணிக்காக கடந்த 13-ம் தேதிநிறுத்தப்பட்டிருந்தது. இந்தரயில் பேசின்பிரிட்ஜ் பணிமனையில் இருந்து சென்னைசென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு கடந்த 14-ம் தேதி அதிகாலை வந்தபோது, இந்த ரயிலின் சி-5, சி-7 பெட்டிகளின் கண்ணாடிகள் மீது மர்மநபர்கள் கற்கள் வீசினர். இதில், இரண்டு கண்ணாடிகள் உடைந்தன. இதுதொடர்பாக, ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து, குற்றவாளியை தேடிவருகின்றனர்.

இந்நிலையில், ரயில் மீது கல்வீசி சேதப்படுத்தினால், ரயில்வே சட்டப்பிரிவின் கீழ்,5 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: ரயில்வே பொது சொத்துகளைப் பாதுகாப்பது அனைவருடைய கடமையாகும். ரயில்கள் மீது கற்களை வீசுவது என்பது ரயில்வே சட்டத்தில் 153 மற்றும் 154 பிரிவுகளின் கீழ் கிரிமினல் குற்றமாகும்.

சட்டவிரோத செயலை செய்தல்,ஆபத்தை ஏற்படுத்துதல், ரயில் பாதையில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பில் ஆபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டால் இந்த சட்டத்தின்படி, ஒரு ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். கற்களை வீசியவர்களை ரயில்வே போலீஸார் மற்றும் ஆர்.பி.எஃப் போலீஸார் தேடி வருகின்றனர். இவ்வாறு சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x