Published : 20 Nov 2017 01:38 PM
Last Updated : 20 Nov 2017 01:38 PM
அன்றைக்கு விவசாயப் பங்களிப்பு 67 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இன்று வெறும் 15 சதவிகிதமாகி விட்டது மதுரையில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசினார்.
மே17 இயக்கம் சார்பில் 'உருவாக்கிடுவோம் தற்சார்பு தமிழ்நாட்டை’ என்ற தலைப்பிலான தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தத்தில் நேற்று நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசும்போது, இயக்கங்களால் தான் இங்கே அரசியல் அசைகிறது. ஒவ்வொரு கோரிக்கைகயையும் பெரிய கட்சிகள் பேசுவதற்கான விதை இயக்கத்தினராலேயே முன்னெடுக்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் தலைவர்களைப் பற்றி மட்டுமே பேசுகின்றனவே தவிர அரசியலைப் பேசவில்லை. ஆனால் அரசியல் என்பது இயக்கம் சார்ந்தது. கொள்கை, தத்துவத்தைப் பேச வேண்டியது.
அரசியலை நிர்ணயம் செய்யும் பணியை மே 17 இயக்கம் செய்து கொண்டிருக்கிறது. தமிழ் தேசிய போராட்டம் 2009-ம் ஆண்டுக்குப் பின் வந்ததல்ல. நீண்ட நெடிய வரலாறு அதற்கு உண்டு.
தமிழ்தேசிய அரசியல் என்பது தேவை சார்ந்தது அல்ல. அது மக்கள் சார்ந்தது. இந்திய அரசியல் சாசனத்தின் கீழ் தமிழ்நாடு தற்சார்பு அடைய முடியாது. இந்தியன், இந்து என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு தமிழ்தேசிய தற்சார்பு நிலையை அடைந்துவிடமுடியாது. வெள்ளையர்கள் காலத்தில் இருந்ததைவிட தற்போது கொடுமையான ஆட்சி நடைபெறுகிறது. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டியவர்கள் முதலமைச்சராகவும், அமைச்சர்களாகவும், சட்டசபை உறுப்பினர்களாகவும் இருக்கும்போது நாங்கள் குண்டர்களாக இருப்பதற்கு பெருமைப்படுகிறோம்.
மே17 இயக்கத்தைச் சார்ந்த திருமுருகன்காந்தி தமிழ்நாட்டில் நடமாட முடியாது என இந்து மக்கள் கட்சி தலைவர் கூறினார். அவர் கூறிய அதே இடத்தில் நின்று தான் தற்போது பேசுகிறேன் . தமிழ்நாடு தமிழர்களின் நாடு. உங்கள் பாரத மாதாவை ஆந்திர எல்லையிலேயே வைத்துக்கொள்ளுங்கள்.
வெள்ளையர்களுக்காக வேலை செய்த காவல்துறை தற்போது கொள்ளையர்களுக்காக வேலை பார்த்து வருகிறது. ஆனால் காவல்துறையின் அடிமட்டத்தில் வேலை பார்ப்பவர்கள் தமிழ் தேசியப் பிள்ளைகளாக இருப்பதால், அவர்களில் பலரும் எங்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார்கள். காவல்துறையில் கூட தற்சார்பின்றி அடிமைப்படுத்தப்படுகிறார்கள். எல்லாமே அடிமைத் தனமாக உள்ளது.
பண்பாடு எங்கு மையம் கொள்கிறதோ அங்கே அரசியல் மையம் கொள்கிறது. எத்தனையோ கோரிக்கைகளுக்கு வீதிக்கு வராத தமிழன் ஜல்லிக்கட்டுக்காக வீதிக்கு வந்தான். பண்பாட்டு ரீதியான அடக்குமுறை வரும் போது, எந்த ஒரு இனமும் வீரம் கொண்டு நிற்கும் என்பதற்கு ஜல்லிக்கட்டுப் போராட்டமே எடுத்துக்காட்டு.
உழைப்பாளர்களின் சந்தையாகவும் , பொருளாதார மையமாகவும் விளங்கும் மதுரை தற்போது அடக்குமுறையால் கொலை செய்யப்பட்டு வருகிறது. கடைகளை இரவு நேரங்களில் மூட வேண்டும் என உத்தரவிடப்படுகிறது. விவசாயிகள், கூலித்தொழிலாளிகள் இரவில் நடமாட முடியவில்லை. தூங்கா நகரம் துடி துடிக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூட இந்த நிலை இல்லை.
காஷ்மீரைப் போலவே தமிழ்நாடு மாறி வருகிறது. வெளிநாட்டுக்காக இரவில் உழைப்பவர்களைப் பாதுகாக்கவே காவல்துறை பணியாற்றிக் கொண்டிருக்கிறது. காவல்துறையின் அடக்குமுறைக்கு அடங்கினால் இதே இடத்தில் ராணுவம், துணை ராணுவம் நிறுத்தப்படும். இதை எதிர்த்து அனைவரும் போராட வேண்டும். சிறையில் நாம் செயல்படுவதற்கு நேர நிர்ணயம் செய்வார்கள். சிறைக்கு வெளியேயும் அதைப் போலவே தான் கடை நடத்துவதற்கும், வெளியில் சுற்றுவதற்கும் நேரம் குறிக்கிறார்கள். சிறையில் இருப்பதும் வெளியே இருப்பதும் ஒன்று தான். சுயமரியாதையில் இருந்து தற்சார்பு பொருளாதாரம் ஆரம்பிக்கிறது.
தமிழர்களாக இல்லாமல் சாதியால் நாம் பிரிக்கப்பட்டுள்ளோம். இதனால் கடந்த 100 ஆண்டுகளாக பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளோம் ஆனால் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது தமிழர் என நாம் அனைவரும் ஒன்று கூடியதால் தான் வெற்றி பெற்றோம். எனவே பண்பாட்டில் விடுதலை அடைய வேண்டும். அப்போது தான் பொருளாதாரத்திலும், அரசியலிலும் விடுதலை அடைய முடியும். கொங்கு மண்டலத்தை ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. யின் தலைமையிடமாக மாற்றும் முயற்சியாகத் தான் தமிழக ஆளுநர் கோயம்புத்தூர் சென்றார். இவர்கள் எப்போதெல்லாம் செல்கிறார்களோ அப்போதெல்லாம் கலவரம் நடக்கிறது.
கோயம்புத்தூரில் இந்து, முஸ்லீம்களுக்குள் மோதலை ஏற்படுத்திவிட்டு அந்த நகரின் அமைதியையும், பொருளாதாரத்தையும் சிதைத்தார்கள். பின்னர் அங்கே மார்வாடிகளும், பனியாக்களும் வியாபாரத்தில் அமர்த்தப்பட்டனர். இப்படித்தான் வணிக மையமாக விளங்கிய கோவை ஆர்.எஸ்.புரம், டவுன் ஹால் உள்ளிட்ட பகுதிகள் இன்று குஜராத் மார்வாடிகளின் வணிகத்தலமாக மாறிவிட்டன. தற்போது கோவை வணிகப் பகுதிகளுக்குச் சென்றால் குஜராத் நகரத்திற்கு சென்றது போல காட்சியளிக்கும். இதே நிலையை தமிழ்நாடு முழுவதும் கொண்டுவர முயற்சித்து வருகிறார்கள். ஆனால் தமிழ்நாடு முழுவதும் அவர்களால் மதப் பிரிவினையை கொண்டுவர முடியவில்லை என்பதால் தான் சாதியை கையில் எடுத்துள்ளனர்.
கலவரத்தை உருவாக்குவதற்காக தான் ஆளுநர் கோவை சென்றுள்ளார். கோவையில் உள்ளூர் வணிகத்தை அழித்த கும்பல் ஈரோடு மற்றும் திருப்பூருக்குச் சென்று அங்கும் வணிகத்தை அழித்து மார்வாடி கையில் கொடுத்தது . ஆர்.எஸ்.எஸ்-க்கும், பி.ஜே.பி-க்கும் கூலி கொடுப்பது மார்வாடிகள் தான். அதனால் தான் அவர்களுக்காக வேலை செய்கின்றனர் . எனவே பண்பாடை புரிந்துகொள்ளுங்கள். தமிழர்கள் இந்துகள் கிடையாது.
திராவிடர்களுக்கு ஆறு, குளம், மரம், காடுகள் தான் கடவுள். இவர்களால் எல்லாவற்றையும் உருவாக்க முடிந்தது. யோகா சிந்து சமவெளி நாகரீகத்தில் இருந்து வந்தது . அதை பெற்று தான் தற்போது மோடி அதனை வியாபாரமாக மாற்றிவருகிறார். திராவிடத்துக்கும், ஆரியத்துக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. நாடோடிகளாக வாழ்ந்தவர்கள் ஆரியர்கள். ஒரே இடத்தில் நிரந்தரமாகத் தங்கி நாகரிகமாக வாழ்ந்தவர்கள் திராவிடர்கள். எதிர்மறை சிந்தனையோடு வாழ்ந்தவர்கள் ஆரியர்கள். ஆனால் எப்போதும் நேர்மறை சிந்தனைகளோடு வாழ்ந்தவர்கள் திராவிடர்கள்.
தமிழர்கள் மரபை நாம் மறந்துவிட்டோம். அதனால் தான் ஆறு, குளம் என எல்லாவற்றையும் அழித்து வருகிறோம் . 1950-ல் 67 சதவீதமாக இருந்த தமிழ்நாட்டின் விவசாயப் பங்களிப்பு 2004-ம் ஆண்டில் 15 சதவீதமாக குறைந்தது. திட்டமிட்டே விவசாயம் அழிக்கப்பட்டுள்ளது. சோப், பேஸ்ட் கூட நம்மால் உற்பத்தி செய்ய முடியவில்லை. நமக்குத் தேவையானதை நாமே உற்பத்தி செய்ய வேண்டும். தேர்தல் முறை தோல்வியடைந்துள்ளது. நாம் நேரடியாகப் போராடி தான் வெற்றி பெற வேண்டும்.
நமக்கு மேட் இன் இந்தியா வேண்டாம். மேட் இன் தமிழ்நாட்டை நாம் உருவாக்குவோம். விவசாய நிலங்களை விற்க வேண்டாம். உலகத் தமிழர்களுக்கென அரசியல் இயக்கம் தேவை . அப்போது தான் தமிழர்களை மீட்டெடுக்க முடியும். ஜாதி, மதம் பார்க்காமல் தமிழர்களாக ஒன்றிணைந்து போராட வேண்டும். பி.ஜே.பி. உலக வர்த்தக நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து நம்மை நசுக்க நினைக்கிறது. தமிழ்நாட்டின் தற்சார்புக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்றார்.
பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் சுமார் 800 பேர் இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT