Published : 01 Nov 2017 02:39 PM
Last Updated : 01 Nov 2017 02:39 PM
வடகிழக்கு பருவமழைக்கு இடைவிடாத ஆய்வுக்கூட்டங்கள் நடத்திய அமைச்சர்கள் அதிகாரிகள் அதன் பின்னர் துரித நடவடிக்கையில் இறங்காத காரணத்தால் புறநகர் பகுதியில் வாழும் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
முதல் நாள் மழையின் போது சென்னையில் கடும் பாதிப்பு ஏற்பட்டதை குறிப்பிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர், மு.க.ஸ்டாலின், ''முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆரம்பத்திலேயே எச்சரித்தும், அலட்சியம் காட்டியதன் விளைவுதான் இது'' என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது பேட்டியை அரசியலாக எடுத்துக்கொள்ளலாமா என்று பார்த்தால், பெரும்பாலான மக்களின் கருத்தும் அதுவாகத்தான் இருக்கிறது என்பதையே சென்னையின் மழை பாதிப்புகள் உணர்த்துகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கினாலே அதிகம் கலங்கி நிற்பது புறநகர் பகுதியில் வசிக்கும் மக்கள்தான். அதுவும் 2015-ம் ஆண்டு பெருமழை வெள்ளத்திற்குப் பின்னர் வடகிழக்கு பருவமழை என்றாலே பொதுமக்கள் நடுங்கித்தான் போகிறார்கள். கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த நிலையில் இந்த ஆண்டு பருவமழை துவங்கும் மாதம் மழைப்பொழிவு உள்ளிட்ட அத்தனை விபரங்களையும் வானிலை ஆய்வு மையமும், வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேனும் திரும்பத் திரும்ப எச்சரிக்கையாக தெரிவித்து வந்தனர்.
மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித்தலைவர்கள் பலரும் இது குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னரே தொடங்கிட வேண்டும் என்று தெரிவித்து வேண்டுகோளாக அரசுக்கு வைத்தனர். கடந்த 2015-ம் ஆண்டு அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் என்று கண்டறிப்பட்ட இடங்களில் பொதுப்பணித்துறை, சென்னை மாநகராட்சி, குடிநீர் வழங்கல் வாரியம், வருவாய்த்துறை அதிகாரிகள் முறையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பலரும் எச்சரித்தனர்.
2015-ம் ஆண்டு அதிகம் பாதிக்கப்பட்ட சேலையூர், முடிச்சூர், போரூர், பள்ளிக்கரணை, படப்பை, பூந்தமல்லி, ஈக்காட்டுத்தாங்கல், புழல், கொரட்டூர், வியாசர்பாடி, ரெட்டைஏரி, விநாயகபுரம், மாதவரம், ரெட்ஹில்ஸ் மற்றும் வடசென்னையின் பல பகுதிகளில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்தப் பகுதிகளில் இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டதா என்றால் கடந்த இரண்டு நாட்களாக அந்தப் பகுதிகளில் வெள்ள நீரில் சிக்கி வாடும் மக்களே பதிலாக இருக்கிறார்கள்.
எதைக்கேட்டாலும் ஆய்வில் இருக்கிறது, கூட்டங்கள் நடத்தியுள்ளோம், இத்தனை ஆயிரம் ஊழியர்கள் பணியில் இருக்கிறார்கள் என்றெல்லாம் அறிக்கைதான் பதிலாக கிடைக்கிறது என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசை குற்றம் சாட்டுகின்றனர்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று திரும்பிப் பார்த்தால் கடந்த ஒரு மாதமாக பல கூட்டங்களை அமைச்சர்கள், அதிகாரிகள் நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆனால் மழை துவங்கும் சில வாரங்களுக்கு முன்னர் போடப்படும் இதுபோன்ற சம்பிரதாயமான கூட்டங்களால் என்ன பயன், கூட்டம் கூடி அறிக்கையை பத்திரிக்கைகளுக்கு அனுப்பிவிட்டு அனைவரும் கலைந்து விடுகின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
கடந்த ஒரு மாத காலமாக கூட்டம் நடத்தியும் மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஈக்காட்டுத்தாங்கல் பாலத்தில் தேங்கி வளர்ந்துள்ள ஆகாய தாமரையைக் கூட அகற்றவில்லை. மழை வெள்ள நீர் தரைப்பாலத்தின் மேல் செல்லும் அபாயம் வந்தவுடன் பேருக்கு இரண்டு ஜேசிபி எந்திரத்தை கொண்டுவந்து ஆகாயத் தாமரையை அப்படியே வெள்ள நீரில் தள்ளிவிடுகின்றனர் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
சாதாரணமாக ஆறு, கால்வாய்களில் உள்ள ஆகாயத் தாமரைகள் குப்பைக்கூளங்களை கூட அகற்றாமல் மழை துவங்கியவுடன் அகற்றும் செயலை செய்யும் அதிகாரிகள் இத்தனை கூட்டம் நடத்தி என்ன செய்தார்கள் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழாமல் இல்லை.
வெள்ள நீர் கரைபுரண்டு ஓடி கடலில் கலக்கும் அடையாறு முகத்துவராத்தை தூர் வாரும் பணி மழை துவங்கிய பின்னர்தான் துவங்குகிறது. ஆனால் பலகோடி இதற்காக நிதி ஒதுக்கியும் இத்தனை காலம் என்ன செய்தார்கள் என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
வடகிழக்கு பருவமழையால் அதிகம் பாதிக்கப்படுவது தென் சென்னை புறநகரில் வாழும் நடுத்தர வர்க்க மக்களும், வடசென்னை புறநகரில் வாழும் அடித்தட்டு மக்களுமே அதிகம். தென் சென்னை புறநகர் பகுதிகளான சேலையூர், பள்ளிக்கரணை, மேற்கு தாம்பரம், முடிச்சூர், படப்பை, குரோம்பேட்டை, பல்லாவரம், பொழிச்சலூர், ராமாபுரம், போரூர் என அனைத்து பகுதிகளிலும் நடுத்தர மக்கள் தங்கள் சேமிப்புகளை சேர்த்து வீடுகட்டி குடியேறி உள்ளனர்.
அலுவலகப் பணி தவிர வேறொன்றையும் அறியாத இம்மக்களை கிள்ளுக்கீரையாக இதுவரை பாவித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பகுதியில் கடந்த இரண்டு நாட்கள் மழையில் இடுப்பளவு தண்ணீர் வந்ததால் அனைத்து பணிகளும் முடங்கிய நிலையில் பொதுமக்கள் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மின்சாரம் தடைப்பட்டு, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், குடிதண்ணீர், உணவு போன்ற அவசியத் தேவைகள் கூட கிடைக்காமல் வாடும் நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் நடத்திய கூட்டங்களை பத்திரிக்கையில் செய்தியாக படித்தபோது இந்த ஆண்டு நல்லது நடக்கும் என்று நினைத்தேன் ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை என்று தெரிவிக்கிறார் பள்ளிக்கரணை பகுதியில் வசிக்கும் நாகேந்திரன்.
முடிச்சூரில் வசிக்கும் பிரேமா என்பவர் கூறும்போது, ''இரண்டு நாட்கள் மழைக்கே வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்து விட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு மழையில் ஒரு வாரத்திற்கு பின்னர் வந்த மழைநீர் இந்த ஆண்டு இரண்டு நாள் மழையிலேயே உள்ளே புகுந்துவிட்டது'' என்கின்றார். அதிகாரிகள், ஊழியர்கள் யாராவது வந்தார்களா? என்று கேட்டபோது 'யாருமே வரவில்லை' என்று தெரிவித்தார்.
இதே நிலைதான் வடசென்னை பகுதி மக்களின் நிலையாகவும் உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த ஆண்டு அமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டங்களால், மாற்றம் வரும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் இரண்டு நாள் மழைக்கே மார்பளவு நீரில் நீந்தி வேலைக்கு போவதுதான் இங்குள்ள நிலை என்று வேதனையுடன் விநாயகபுரம் மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆய்வுக்கூட்டங்களும், அறிக்கைகளும் மழை வெள்ள நீரை தடுத்து விடுமா? அதிகாரிகள் எல்லாம் எங்கே சென்றார்கள் என்ற கேள்வியை பல பகுதிகளில் கேட்க முடிகிறது. ஒவ்வொரு மண்டலத்திற்கும் அளிக்கப்பட்ட அதிகாரிகள் அல்ல சாதாரண வார்டு அதிகாரி கூட போனை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி.
தொலைக்காட்சி சானல் ஒன்றில் பேசிய அவர் நான் எம்.எல்.ஏ என்று அந்த அதிகாரிக்கு மெசேஜ் அனுப்பியும் கூட அந்த அதிகாரி போனை எடுக்கவில்லை, மரியாதைக்கு பதிலுக்கு வேலையாக இருக்கிறேன் என்று மெசேஜ் கூட போடவில்லை, எம்.எல்.ஏ எனக்கே இந்த கதி என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
பொதுவாக புறநகர் பகுதிகளில் வீடுகட்டி வாழும் மக்கள் சொந்த வீடு என்பதால் வேறு இடத்திற்கும் குடிபெயர முடியாத நிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகளும் இல்லாத நிலையில் அனைத்துமே அதிகாரிகள் கையில் உள்ளது எனும்போது அவர்கள் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. பணிகள் நடைபெறவே இல்லை என்று கூறமுடியாது. ஆனால் கடந்த கால அனுபவ படிப்பினையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இந்த ஆண்டும் அதே நிலை தொடருகிறது என்பது சாதாரணமாக வெளியே தெரியும் நிலையில் அதிகாரிகள் எங்கே சென்றார்கள் என்ற கேள்வி எழுகிறது.
பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் பல்வேறு கேள்விகளை மாநகராட்சி ஆணையரிடம் கேட்க 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் தொடர்பு கொள்ள முயன்றபோது முடியவில்லை. பிரதமரின் சென்னை வருகையை ஒட்டிய ஆய்வுக் கூட்டத்தில் உள்ளதாக நமக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து சென்னை புறநகரில் ஏரிகளை சீரமைத்து வரும் சமூக ஆர்வலர் அருண் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
”இந்த விவகாரத்தில் அதிகாரிகளை மட்டும் குறைசொல்வது ஏற்புடையது அல்ல. கடந்த 2015 ஆம் ஆண்டு அனுபவத்தை வைத்து அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் நடைமுறையில் வரும்போது நேற்று உருவான சிறிய அரசியல் கட்சிகள் கூட ஆக்கிரமிப்புகளை அகற்றத் தடையாக இருப்பதைத்தான் நடைமுறையில் பார்த்தோம்.
அடுத்து யாருக்கு பொறுப்பு இருக்கிறது என்றால் பொதுமக்களுக்கு அதிகம் பொறுப்பு வேண்டும் என்று சொல்வேன். காரணம் மழை வரும்போது மட்டுமே இதுபற்றி யோசிக்கிறோம். அதன் பின்னர் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. ஏரியை தூர்வார சமீபத்தில் அழைப்பு விடுத்த போது பத்துபேருக்கும் குறைவானவர்களே வந்தனர். இது நமக்கிடையே உள்ள விழிப்புணர்வின்மையையே காட்டுகிறது.
கால்வாய் பாதைகளில், நீர்நிலை வழிகளில் குப்பைகளை போடுவது, ஆக்கிரமிப்புகள் என பல விஷயங்கள் இதன் பின்னனியில் உள்ளது. ஆகவே இதில் சாதி, மதம், இனம், அரசியல் கட்சி அனைத்தையும் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு நீர் நிலை பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் வரும் காலங்களில் சென்னையிலேயே நாம் வாழ முடியாத நிலை ஏற்படும்'' என்று அருண் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT