Published : 19 Jul 2023 03:05 AM
Last Updated : 19 Jul 2023 03:05 AM

சுற்றுலா தலமான ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா - முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில், வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஆடிப்பெருக்கு விழா நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று (18-ம் தேதி) ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கு விழா அரசு விழாவாக நடத்தப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான ஆடிப் பெருக்கு விழா, வரும் ஆகஸ்ட் 2 முதல் 4-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்த விழா தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: "ஆடிப் பெருக்கு விழாவில் அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்எல்ஏ-க்கள் பங்கேற்க உள்ளனர். இதுதவிர, சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகை தருவர். எனவே, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகள் செய்தல், தடையில்லா மின்சாரம் வழங்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல், தற்காலிக கழிப்பிட வசதிகள் செய்தல், போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை அரசின் பல்வேறு துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

மேலும், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த கண்காட்சி அரங்குகள் அமைத்திட வேண்டும். விழா நடைபெறும் 3 நாட்களிலும் சுற்றுலாத் துறை மற்றும் சேலம் மண்டல கலைப் பண்பாட்டுத் துறை, பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறை இணைந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல, ஆடிப் பெருக்கு விழாவின்போது சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம்கள் நடத்தவும் ஏற்பாடு செய்திட வேண்டும். அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்க தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்" இவ்வாறு பேசினார்.

இந்தக் கூட்டத்தில், பென்னாகரம் எம்எல்ஏ ஜி.கே.மணி, ஏடிஎஸ்பி இளங்கோவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x