Published : 19 Jul 2023 02:38 AM
Last Updated : 19 Jul 2023 02:38 AM
மதுரை: ‘வழக்கறிஞர்கள் தொழிலில் பலருக்கு உதவ முடியும். சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியும்’ என நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பேசினார்.
மதுரை சட்டக் கல்லூரியில் 5 ஆண்டு சட்டப்படிப்பில் (பிஏ, எல்எல்பி) சேர்ந்துள்ள மாணவர்கள் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. சட்டக் கல்லூரி முதல்வர் பி.குமரன் தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் முருகேசன் வரவேற்றார்.
இதில் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் பேசியதாவது: முதலில் மருத்துவம், பொறியியல் படிப்புகளில் தான் அதிகளவில் மாணவர்கள் சேர்ந்து வந்தனர். தற்போது அந்த நிலை மாறி சட்டப் படிப்பில் அதிகளவில் மாணவ, மாணவிகள் சேர்ந்து வருகின்றனர். வழக்கறிஞர் தொழில் புனிதமானது. அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் தெய்வீக தொழிலாக மாறும்.
வழக்கறிஞர் தொழிலில் பலருக்கு உதவி செய்ய முடியும். பொது காரணங்களுக்காக போராட முடியும். சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும். சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியும். இந்த வாய்ப்புகள் வேறு தொழிலில் இருப்பவர்களுக்கு கிடைக்காது.
சட்ட படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள் வகுப்புகளுக்கு தவறாமல் செல்ல வேண்டும். பாடங்களை நன்றாக கவனிக்க வேண்டும். நேரம் கிடைக்கும் போது நீதிமன்றங்களுக்கு சென்று வழக்கு விசாரணையை பார்வையிட வேண்டும். வழக்கறிஞர்கள், நீதிபதிகளிடம் கலந்துரையாட வேண்டும். தேர்வுக்கு சிறப்பாக தயாராக வேண்டும். இவற்றை மட்டும் பின்பற்றினால் வெற்றிகரமான வழக்கறிஞராக வர முடியும்.
சட்டம் படித்தவர்களுக்கு வழக்கறிஞர் தொழில் மட்டும் அல்ல. பல்வேறு தளங்கள் உள்ளன. ஆராய்ச்சியாளராகவும், ஆசிரியராகவும், அரசியல்வாதியாகவும் ஆகலாம். நல்ல படிப்பை தேர்வு செய்துள்ளீர்கள். உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இவ்வாறு நீதிபதி பேசினார்.
இந்த விழாவில் வழக்கறிஞர் சங்க பொதுச் செயலாளர் ஆர்.வெங்கடேசன் உட்பட பலர் பேசினர். உதவி பேராசிரியர் டி.ரம்யா நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT