Published : 19 Jul 2023 02:17 AM
Last Updated : 19 Jul 2023 02:17 AM
மதுரை: வீட்டிலிருந்தே செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு ‘சீருடை’ அணிந்து வரக்கூடாது என்று மருத்துவக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டநிலையில் அரசு மருத்துவமனைகளில் சீருடை மாற்றுவதற்கு போதுமான அறை வசதி இல்லாததால் செவிலியர்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள், வெள்ளை சீருடை அணிந்து பணிபுரிவார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள், இதுவரை வீட்டில் இருந்தே சீருடைகளை அணிந்து கொண்டு மருத்துமவனைக்கு வருவார்கள். சொற்பமானவர்களே சீருடைகளை கையில் எடுத்து வந்து, மருத்துவமனைக்கு வந்து அவற்றை மாற்றுவார்கள். மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போன்ற தமிழகத்தில் உள்ள பெரிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் 400க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணிபுரிகிறார்கள்.
இவர்களுக்கு ஷிப்ட் அடிப்படையில் பணிகள் ஒதுக்கப்படுகின்றன. இதில் அதிகாலை பணிக்கு வரும் செவிலியர்கள், வீட்டு வேலைகளை முடித்துவிட்டு மருத்துவமனைக்கு வேகமாக பணிக்கு வர வேண்டிய உள்ளது. இவர்களில் சிலர், வீட்டில் இருந்து சாதாரண ஆடைகளில் வந்துவிட்டு அரசு மருத்துவமனைக்கு வந்து அங்கு சீருடைகளை அணியும்போது பணிக்கு தாமதமாக வர வாய்ப்புள்ளது. ஏனென்றால் மருத்துவமனையில் ஒரே நேரத்தில் பணிக்கு வருவோர் சீருடையை அணிவதற்கு போதுமான அறைகள் இல்லை. இந்த தாமதத்தை தவிர்க்க, செவிலியர்கள் பெரும்பாலானவர்கள், வீட்டிலே ஒரே நேரமாக சீருடையை அணிந்துவிட்டு மருத்துவமனைக்கு வந்து பணிபுரிவார்கள்.
இந்நிலையில் மருத்துவக்கல்வி இயக்குனரகம், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் உள்பட பணியாளர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே சீருடை அணிந்து வரக்கூடாது என்றும், மருத்துவமனையில் வந்துதான் சீருடையை அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதனால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த சில நாளாக செவிலியர்கள், வீட்டில் இருந்து சாதாரண உடையும், மருத்துவமனையில் வந்து சீருடையும் அணிகின்றனர். ஆனால், செவிலியர்கள் போதுமான உடை மாற்றும் அறைகள் இல்லாமல் அவர்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து செவிலியர்கள் கூறுகையில், ‘‘மதுரை அரசு மருத்துவமனையில் 400 செவிலியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களில் 250 பேர் அதிகாலை 7 மணி ஷிப்ட் பணிக்கு வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மருத்துவனைக்கு வந்து ‘சீருடை’ அணிவதற்கு போதுமான உடை மாற்றும் அறை இல்லை. அப்படியே இருந்தாலும் சீனியர் செவிலியர்கள் உடை மாற்றும் அறைகளில் எளிதாக சென்றுவிட முடியாது. நாங்கள் மருத்துவமனைக்கு வந்தே சீருடையை அணிந்து கொள்கிறோம்.
அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. போதுமான உடை மாற்றும் அறை வழங்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்யாமல் இப்படி உத்தரவு பிறப்பிப்பதால் வீட்டில் இருந்து ஒரு ஆடை, மருத்துவமனைக்கு வந்து ஒரு ஆடை என அணிவது மிகுந்த சிரமம். பல அரசு மருத்துவமனைகளில் வார்டுகள் ஒரு புறம் உள்ளது. அறை மாற்றும் இட நீண்ட தூரம் நடந்து சென்று மாற்ற வேண்டிய உள்ளது’’ என்றனர்.
மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், ‘‘வீட்டில் இருந்தே சீருடை அணிந்து வருவதால் சாலைகளில் தூசிகள், கிருமிகள் தொற்று ஏற்பட உள்ளது. அதே சீருடையுடன் வார்டுகளில் பணிபுரியும்போது நோயாளிகளுக்கு தொற்று ஏற்படவும், தூசிகளால் தொந்தரவு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதை தவிர்க்கவே மருத்துவமனைக்கு வந்து சீருடை அணிய கூறியுள்ளோம். போதுமான அறை வசதிகள் ஏற்படுத்தப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT