Published : 18 Jul 2023 10:31 PM
Last Updated : 18 Jul 2023 10:31 PM

6 மணி நேர விசாரணை நிறைவு - வீடு திரும்பினார் அமைச்சர் பொன்முடி

சென்னை: அமலாக்கத் துறை விசாரணையை முடித்துக்கொண்டு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரின் மகன் கவுதம சிகாமணி இருவரும் வீடு திரும்பினர்.

சென்னை, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி எம்.பி.யின் வீடு, அலுவலகம் உட்பட அவர் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக சென்னை அமலாக்கத் துறை அலுவலகத்தில் இரண்டாவது நாள் விசாரணை இருவரிடம் நடைபெற்றது. அமலாக்கத் துறையின் சம்மனின்படி இரண்டாவது நாளாக விசாரணைக்கு நேரில் ஆஜராகினர் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரின் மகன் கவுதம சிகாமணி இருவரும். சுமார் 4 மணியளவில் ஆஜரான நிலையில் இருவரிடமும் அமலாக்கத் துறை அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். 6 மணி நேர விசாரணைக்கு பின்பு இருவரும் வீடு திரும்பினர்.

வைப்புத் தொகை முடக்கம்: முன்னதாக, அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அமலாக்கத் துறை கடந்த 17.7.2023 அன்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடிக்கு சொந்தமான 7 இடங்களில் சோதனையில் ஈடுபட்டது. அதேபோல் அவரது மகன் கவுதம் சிகாமணி, நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தியது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டம் 2002-ன் கீழ் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சட்டவிரோத செம்மண் குவாரிகள் தொடர்பான வழக்கில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பொன்முடி அப்போது சுரங்கத் துறை அமைச்சராக இருந்தார். ஆகையால் அவரது மகன், உறவினர்கள் என பினாமி பெயர்களில் உரிமம் வழங்குவதில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். சட்டவிரோத செம்மண் குவாரிகளில் கிடைத்த வருமானமானது பினாமி கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் PT Excel Mengindo என்ற கணக்கிலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் Universal Business Ventures FZE என்ற நிறுவனப் பெயரின் கணக்கிலும் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

இந்தோனேசிய நிறுவனம் ரூ.41.57 லட்சத்துக்கு வாங்கப்பட்டு பின்னர் 2022ல் ரூ.100 கோடிக்கும் மேல் விற்கப்பட்டது. ஹவாலா மூலம் நிறைய பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

சோதனையின்போது கணக்கில் வராத ரூ.81 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. வெளிநாட்டுக் கரன்ஸிகள் குறிப்பாக பிரிட்டிஷ் பவுண்ட் கரன்ஸிக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.13 லட்சம். இவற்றிற்கான ஆதாரம் பற்றி விளக்கம் இல்லை. இவை அனைத்தும் பொன்முடி இல்லத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

விசாரணையை திசைதிருப்பும் வகையில், அவர்கள் குடும்பத்துக்குச் சொந்தமான மருத்துவமனையின் பணம் அது என்றும் தெரிவிக்கப்பட்டது. கணக்கு தணிக்கை பதிவுகள் போலியாக ஜோடிக்கப்பட்டதும் அமலாக்கத் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. பொன்முடி இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்துக்கு முறையான விளக்கம் ஏதும் இல்லை.

அமலாக்கத் துறை விசாரணையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் சம்பாதிக்கப்பட்டுள்ளன. பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றை ஆய்வு செய்து வருகிறோம். ரூ.41.9 கோடி பணத்தை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டம் 17(1A)வின் கீழ் நாங்கள் முடக்கியுள்ளோம். இது வைப்புத் தொகையாக வங்கியில் இருந்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் விசாரணை: தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி. இவர் கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி, கனிம வளத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக 2.65 லட்சம் லோடு லாரி செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகவும் பொன்முடி மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக அமலாக்க துறைக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன்படி, சென்னை, விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

13 மணி நேரத்துக்கு மேலாக நடந்த சோதனைக்கு பிறகு, இரவு 8 மணி அளவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடியை விசாரணைக்காக நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அவரது காரில் அழைத்து சென்றனர். அங்கு நள்ளிரவை தாண்டி விசாரணை நீடித்தது. அப்போது, மகன் அசோக் உடன் இருந்தார். இந்த விசாரணை இன்று அதிகாலை 3 மணியளவில் நிறைவு பெற்றது. இதன்பின் அவர் வீடு திரும்பினார். இதனிடையே, இன்று மாலை 4 மணிக்கு அமைச்சர் பொன்முடி மீண்டும் விசாரணைக்காக அமலாக்கத் துறை முன்பு ஆஜரானார். | நடந்தது என்ன? - அமலாக்கத் துறை விடிய விடிய விசாரணை - அமைச்சர் பொன்முடியின் அந்த 20 மணி நேரம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x