Published : 18 Jul 2023 09:01 PM
Last Updated : 18 Jul 2023 09:01 PM
சென்னை: பொது இடங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் பொது இடங்களில் கண்காணிப்பு குறைபாடுகளை கலைந்து, பொது இடங்களில் கூடும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க வேண்டுமென மூத்த நீதிபதியாக இருந்த என்.கிருபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இதனை ஏற்ற அப்போதைய தலைமை நீதிபதி அமர்வு பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான, அரசு பிளீடர் முத்துக்குமார், "பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நடந்த ஓராண்டில் 69 சதவீத இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆட்டோ, கால் டாக்சிகளில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
அரசுத் தரப்பு வாதங்களை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், ரயில்வே துறைக்கும் அவகாசம் வழங்கி வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வளவு நாட்களில் முடிக்கபடும் என்பது குறித்த விவரத்தையும் அறிக்கையில் தெரிவிக்கும்படி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT