Published : 18 Jul 2023 08:41 PM
Last Updated : 18 Jul 2023 08:41 PM
மதுரை: மதுரை மாவட்டத்தில் வனத்துறையினரின் ஏற்படுத்திய விழிப்புணர்வால் பொதுமக்கள் வீடுகளில் வளர்த்த 700 கிளிகளை வனத்துறையினரிடம் தாமாகவே முன்வந்து ஒப்படைத்தனர். கிளிகளைப் பெற்ற வனத்துறையினர் அதன் இறகுகளை நறுக்கி மறுவாழ்வு மையத்தில் வைத்து பராமரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் வீடுகளில் தடை செய்யப்பட்ட கிளிகளை கூண்டுகளில் அடைத்து வளர்ப்பது குறித்தும், சிலர் கிளிகளை விற்பனை செய்வது குறித்தும் வனத்துறையினருக்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக மதுரை மாவட்ட வனத்துறை அதிகாரி குருசாமி தபாலா உத்தரவின்படி, தமிழ்நாடு வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம்-1972, திருத்திய சட்டம்-2022-ன்படி கிளிகள் பாதுகாக்கப்பட்ட பறவைகள். கிளிகளை வீட்டில் வைத்து வளர்ப்பதும், விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம். வீடுகளில் கிளிகள் வளர்ப்போர், மாவட்ட வன அலுவலகத்தில் ஜூலை 17ம் தேதிக்குள் ஒப்படைத்தால் வன உயிரினக் குற்றவழக்கு பதிவு செய்யப்படாது. கிளிகளை ஒப்படைக்கத் தவறினால் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தில் பல லட்சம் அபராதத்துடன் கடும் நடவடிக்கைள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு வனச்சரகர் சசிக்குமார் மற்றும் வனவர்கள் சதீஷ், விஜயராஜ் ஆகியோர் மாநகராட்சி பகுதியில் வீடு, வீடாக சென்று விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர். இத்தகைய விழிப்புணர்வால் பொதுமக்கள் தாமாகவே முன்வந்து வனத்துறையினரிடம் கிளிகளை ஒப்படைத்தனர். அந்த வகையில் செவ்வாய்க்கிழமை மாலை வரை சுமார் 700 கிளிகளை ஒப்படைத்தனர்.
இதனைப்பெற்ற வனத்துறையினர் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களிலுள்ள தனியார் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இயங்கும் பறவைகள் மறுவாழ்வு மையத்தில் 700 கிளிகளையும் வைத்து வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். அங்கு இறகுகள் நறுக்கப்பட்ட கிளிகள், கூண்டுகளில் முடங்கிய கிளிகளை திறந்தவெளி மையத்தில் வைத்து பராமரிக்கின்றனர்.
பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் காப்புக்காடுகளில் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் அனுமதியின்றி வளர்ப்போர் எப்போது வேண்டுமானாலும் ரேஸ்கோர்ஸ் சாலையிலுள்ள மாவட்ட வன அலுவலகத்தில் வந்து ஒப்படைக்கலாம் எனவும், வனத்துறையினர் பறிமுதல் செய்தால் கடும் அபராதம் விதிப்பதோடு, நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT