Published : 18 Jul 2023 05:49 PM
Last Updated : 18 Jul 2023 05:49 PM
பெங்களூரு: "மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ‘INDIA’ என்று வரக்கூடிய வகையில் பெயரை முன்மொழிந்தார். அதை திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் சரியென்று வழிமொழிந்தார். ராகுல் காந்தியும் அதையே வழிமொழிந்தார். இறுதியில் அனைவரும் ஒருங்கிணைந்து INDIA - இந்தியா என்கிற பெயரிலேயே இந்தக் கூட்டணியை அமைப்பது என்ற ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது" என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கில் நிதிஷ் குமார், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, கேஜ்ரிவால் உட்பட 26 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டனர். வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜகவுக்கு எதிராக வியூகம் அமைக்கவும், வலுவான முன்னணியை முன்வைக்கவும் பெங்களூருவில் கூடியுள்ள 26 எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘INDIA’ (இந்தியா) என்ற பெயர் சூட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பெங்களூருவில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "கூட்டணிக்கான பெயர் தொடர்பான முன்மொழி நடந்தது. ஒவ்வொருவரும் ஒரு கருத்தை தெரிவித்தோம். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி INDIA - இந்தியா என்று வரக்கூடிய வகையில் பெயரை முன்மொழிந்தார். விசிக சார்பில் Save India Alliance அல்லது Secular India Alliance என்ற பெயர் வைக்கலாம் என்று முன்மொழியப்பட்டது.
We for India என்ற பெயரை வைக்கலாம் என்று இடதுசாரி அமைப்புகள் தங்களது கோரிக்கையை முன்வைத்தார்கள். Indian Main Alliance அல்லது Indian Main Front என்கிற பெயரில் இந்த கூட்டணிக்கு பெயர் வைக்கலாம் என்று பிஹார் முதல்வர் நித்தீஷ் குமார் பரிந்துரைத்தார். இப்படி கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரும் தங்களது கருத்தை முன்வைத்தனர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ Indian peoples Alliance என்ற பெயரை முன்மொழிந்தார். திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி முன்மொழிந்ததை சரியென்று வழிமொழிந்தார். ராகுல் காந்தியும் அதையே வழிமொழிந்தார்.
இறுதியில் அனைவரும் ஒருங்கிணைந்து INDIA (இந்தியா) என்கிற பெயரிலேயே இந்த கூட்டணியை அமைப்பது என்ற ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டணியின் பெயரும் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி, இது தன்னுடைய இந்தியா என உரிமை கோருகிறார். இது மக்களுக்கான இந்தியா என்ற கருத்தியலின் அடிப்படையில் INDIA என்ற பெயரை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்" என்று அவர் கூறினார். | வாசிக்க > INDIA | எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்டல்: பெங்களூரு கூட்டத்தில் அறிவிப்பு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT